கொரோனா தொற்றுப் பரவல் மற்றும் மஹா சங்கத்தினரின் வேண்டுகோள் உள்ளிட்ட நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பல்வேறு காரணங்களையும் கருத்தில் கொண்டு மாகாணசபைத் தேர்தல் நடத்துவதை திகதி குறிப்பிடப்படாது பிற்போடுவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கோவிட் 19 தொற்று பரவலின் நிலைமை, புதிய தேர்தல் முறையொன்று தயாரிக்கப்படும் வரையும், மற்றும் மஹா சங்கத்தினரால் முன்வைக்கப்பட்டுள்ள எதிர்ப்புகள் என்பவற்றை கவனத்தில் கொண்டு மாகாணசபைத் தேர்தல் நடத்துவதை பிற் போடுவதற்கு நேற்று முன்தினம் (28) கூடிய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதென சுற்றாடல்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்
அமைச்சு அலுவலகத்தில் நேற்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
நேற்று ஆரம்பமான சிவனொளிபாதமலை யாத்திரை தொடர்பில் பேசிய அமைச்சர், யாத்திரையின்போது மலையை அண்டிய பகுதிகளில் குப்பை கூளங்கள், பொலித்தீன், பிளாஸ்டிக் பொருட்கள் என்பவற்றை வீசுவதை தவிர்க்குமாறு அமைச்சர் யாத்திரிகர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் வகைகளை சுற்றுச்சூழலில் வீசும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொலிசாருக்கு தான் அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்
இச்சந்தர்ப்பத்தில் மாகாணசபைத் தேர்தல் நடத்துவது தொடர்பில் ஊடகவியலாளர்கள் அமைச்சரிடம் கேட்டபோதே, மாகாண சபை தேர்தல் பிற்போட தீர்மானித்ததாக கூறினார்.