திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்க மாட்டேன் என்று அறிவித்ததால் தமிழ்நாடு தப்பிப் பிழைத்துள்ளது என இலங்கையின் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இந்திய வம்சாவளி குடும்பத்தை சேர்ந்தவரான மனோ கணேசன், இலங்கையில் பிறந்தவர் என்றபோதும் தமிழ்நாடு தொடர்பான தகவல்களை மிகவும் உன்னிப்பாக கவனித்து வருபவர். சமூக ஊடகங்களில் மனதில் பட்டதை பதிவிடும் வழக்கத்தைக் கொண்டிருக்கும் இவர், ரஜினியின் அரசியல் கைவிடல் அறிவிப்புக்கு பிறகு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நீளமான கட்டுரையை எழுதியிருக்கிறார். அதை இங்கே வழங்குகிறோம்.
ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும், தமிழ்நாடு, பல வட இந்திய மாநிலங்களை விட முன்னேறிய ஒரு மாநிலம்.
வட இந்தியாவில், டெல்லி, மும்பாய், கொல்கத்தா, சண்டிகர், அஹமதாபாத் ஆகிய மாநகரங்களை சுற்றிய பகுதிகளில் மட்டுமே “முன்னேற்றம்” தெரியும்.
வட இந்தியாவில், உள்ளூரில், கிராமிய நாட்டுப் புறங்களில், “பின்னேற்றம்” கண்கூடாக தெரியும்.
தமிழ்நாட்டின் இந்த “ஒப்பீட்டளவிலான முன்னேறிய” நிலைமைக்கு காரணம் இம்மாநிலத்தையும், புதுச்சேரியையும் தேசிய கட்சிகள் அல்லாமல், “திராவிட” கட்சிகள் பல பத்தாண்டுகளாக ஆண்டு வருவதே காரணம்.
திராவிட இயக்க அணியின் மூலக்கொள்கை “சமூக நீதி” என்பதாகும். இந்நீதி, நீதிக்கட்சியிலிருந்து ஆரம்பமாகி பெரியார், அண்ணா ஆகிய பெருந்தலைவர்களால் செதுக்கப்பட்டதாகும். இதுதான் தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்கு அடிநாதமாக விளங்குகிறது.
இந்த உண்மையை ஆய்வு ரீதியாக ஆராய்ந்து பார்த்தால்தான் விளங்கும்.
திமுக, அஇஅதிமுக ஆகிய கட்சிகளின் அரசியல்வாதிகளின் அலங்கோலங்கள் உண்மை. ஆனால், இந்த அலங்கோலங்களுக்கு அப்பால் இந்த உண்மை இருக்கிறது.
வட இந்திய கட்சிகளின், அரசியலர்களின் “படா” அலங்கோலங்கள் பற்றி தெரியாதவர்களும், வட இந்திய மாநிலங்களை நேரடியாக கண்டிராதவர்களும் தான், திராவிட கட்சிகளை முழுமையாக குறை கூறுவார்கள்.
திராவிட கட்சிகளில் தவறு, பிழை, குற்றம் கணிசமாக இருக்கிறது. அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. ஆனால் வட இந்திய மாநில ஆட்சிகளுடன் ஒப்பிடும் போது, அதற்கு இது பரவாயில்லை என்று தெரிய வரும். இதுதான் உண்மை.
கல்வி, சுகாதாரம், அறிவியல் வளர்ச்சி, ஆங்கில மொழியறிவு, கைத்தொழில், வர்த்தகம், கலை, விளையாட்டு, போக்குவரத்து, தகவல் தொடர்பு, ஜாதீயம்-பெண்ணடிமை ஒழிப்பு, பின்தங்கியோருக்கான கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் துறைகளில் ஒதுக்கீடு,… என்ற பல்வேறு துறைகளில் தமிழகம் இந்தியாவில் முன்னேறிய மாநிலமாக இருக்கிறது.
திராவிட கட்சிகளின் தவறுகள் இன்னமும் திருத்தப்பட்டு அவற்றுக்கு உள்ளேயே இருந்து உருவாகும் புதிய அமைப்புகள்தான் தமிழகத்தை இன்னமும் சிறந்த இலக்கை நோக்கி கொண்டு செல்ல முடியுமே தவிர, “திராவிட” கட்சிகளுக்கு மாற்று “தேசிய” கட்சிகள் அல்ல.
இந்த பின்னணியில் பார்த்தால், தேசிய கட்சிகளை “ஆன்மீகம்” என்ற பெயர் சூட்டி, குறுக்கு வழியில் சிம்மாசனத்தில் உட்கார வைக்க முயன்ற, நடிகர் ரஜினி காந்த் நேரடி அரசியலை கைவிட்டமை, தமிழகத்தில் இன்று நிகழ்ந்த மிக நல்ல ஒரு சம்பவம்..!
தமிழகத்தில் இன்று, “திராவிடம்” என்ற வலயத்துக்குள் வராத நாம் தமிழர், பாமக, வைகோ, கமல் கட்சி போன்ற மாநில கட்சிகளும் இருக்கின்றன. இவற்றிலும் சில-திராவிட கட்சிகளுடன் மோதுகின்றன. இந்த கட்சிகள் மீது எனக்கு பெரு விமர்சனம் இப்போது இல்லை.
இவையும் காலக்கதியில் திராவிடக் கட்சிளுடன் கூட்டாகவோ, தனித்தோ ஆட்சி பீடமேறலாம்.
நான் இங்கே கருத்து கூறுவது, “தேசிய கட்சிகள்”, “மாநில கட்சிகள்” என்ற இரண்டு பெரிய வரையறைகளின் அடிப்படையில்தான் என்று கணேசன் குறிப்பிட்டுள்ளார்.
மனோ கணேசனின் இந்த பதிவுக்கு நூற்றுக்கும் அதிகமானோர் பதில் இடுகைகளை பதிவிட்டிருந்தனர்.
இதையடுத்து மனோ கணேசன், “இந்த கலந்துரையாடலில் கலந்துக் கொண்ட எல்லோருக்கும் நன்றி. இங்கே நான் கண்ட சில பிரச்சினைகள் என்வென்றால்;
(1)”ரஜினி ஒரு சினிமா நடிகர்” என்பதோ அல்லது “அவர் பிறப்பால் ஒரு தமிழர் அல்ல” என்பதோ எனது கருத்துகளுக்கு காரணம் அல்ல என்பது சிலருக்கு புரியவில்லை.
(2)”சமூக நீதி” என்று நான் எதை சொல்கிறேன் என சிலருக்கு முழுமையாக புரியவில்லை. சிலருக்கு பாதிதான் புரிகிறது.”
தனிப்பட்ட வாழ்வில் ஆன்மீகம் என்பதற்கும், பெரியாரின் திருமணத்துக்கும் நான் முக்கியத்துவங்கள் தரவில்லை.
இவை அவரவர் தனிப்பட்ட வாழ்வுகள். இவற்றையெல்லாம் வைத்து பேசப்போனால் ஒருவரும் மிஞ்ச மாட்டார்கள்.
ஆன்மீகத்தை அரசியலுக்கு ஒரு அடையாளமாக பயன்படுத்த விளைந்தமையே சிக்கலை ஏற்படுத்தியது.
காமராஜர் ஒரு விதிவிலக்கு. அவரது மகிமையின் பெயர் மகா எளிமை.
அவருக்கு பின் இன்னொருவரை அப்படி காட்டுங்கள் பார்க்கலாம். முடியாது. ஆகவே அவர் பெயரை சொல்லி, தமிழகத்தில் தேசிய கட்சிகள் ஆட்சியுரிமை கோர முடியாது. அப்படி கோருவது கொடுமை.
அப்படியானால் அன்றே தேசிய மட்டத்தில் காமராஜருக்கு இருந்ததை விட அதிக மரியாதையை இந்திரா காந்தி தந்திருக்க வேண்டும்.
ஆன்மீகவாதிகளாக, பட்டினத்தார் முதல் கைலாஷ் நித்தியானந்தா வரை அநேகர் இருந்திருக்கிறார்கள்.
இந்த ஆன்மீகத்தை அரசியல் ஆட்சியுரிமையை பெறுவதற்கான தகைமையாக காட்டுவதில்தான் சிக்கல்.
முன்னாள் இலங்கை வட மாகாண முதல்வர் விக்னேஸ்வரன்கூட ஆன்மீகவாதிதான். ஆனால் அவர் அதை, ஆட்சியுரிமைக்கான தனது விசேட தகைமையாக காட்டிக்கொண்டதாக எனக்கு ஞாபகமில்லை.
அப்படி பார்த்தால் முதலிடத்தில் இருப்பவர், தமிழகத்தில் பிறந்த சுவாமி நித்யானந்தாதான் என தனது ஃபேஸ்புக் பதிவில் பதில் அளித்திருக்கிறார் மனோ கணேஷன்.
(பிபிசி)