‘த்ரிஷ்யம் 2’ திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்ற அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
2013-ம் ஆண்டு ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான படம் ‘த்ரிஷ்யம்’. மலையாளத்தில் பிரம்மாண்ட வரவேற்பைப் பெற்ற இப்படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. ‘த்ரிஷ்யம்’ படத்துக்குப் பிறகு மோகன்லால் – ஜீத்து ஜோசப் கூட்டணி ‘ராம்’ படத்தில் இணைந்து பணிபுரிந்தது.
கரோனா ஊரடங்கில் திட்டமிட்டபடி படப்பிடிப்பைத் தொடர முடியவில்லை. ஆகையால், மோகன்லால் – ஜீத்து ஜோசப் கூட்டணி ‘த்ரிஷ்யம் 2’ படத்தின் பணிகளைக் கேரளாவில் தொடங்கினார்கள். ஒரே கட்டமாக 46 நாட்களில் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிக்கப்பட்டது. இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தது.
புத்தாண்டுக் கொண்டாட்டமாக ‘த்ரிஷ்யம் 2’ டீஸர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் ‘த்ரிஷ்யம்’ படத்தின் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்நோக்கியிருந்தனர். ஆனால், அமேசான் ஓடிடி யூடியூப் தளத்தில் டீஸர் வெளியிடப்பட்டது. மேலும், விரைவில் அமேசான் ஓடிடி தளத்தில் படம் வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த அறிவிப்பு ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பலரும் இந்த அறிவிப்பை எதிர்பார்க்கவில்லை என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள். மேலும் மாபெரும் வரவேற்பைப் பெற்ற ‘த்ரிஷ்யம்’ படத்தின் தொடர்ச்சி என்பதால் பல்வேறு திரையுலகினரும் ஆவலுடன் எதிர்நோக்கியிருந்தனர். ஏனென்றால், இதுவும் வெற்றியடையும் பட்சத்தில் ரீமேக் உரிமையைக் கைப்பற்றிவிட வேண்டும் என எண்ணினார்கள்.
ஆனால், ஓடிடி தளத்தில் ‘த்ரிஷ்யம் 2’ வெளியீடு என்ற அறிவிப்பு கொஞ்சம் அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏனென்றால் ஓடிடி தளத்தில் வெளியிட்டால் பலரும், ஆங்கில சப்-டைட்டிலுடன் பார்த்துவிடுவார்கள். மேலும், இதர மொழிகள் சப்-டைட்டிலும் சில நாட்களிலேயே வெளியிட்டுவிடுவார்கள். அப்படியிருக்கும்போது ரீமேக் செய்ய வாய்ப்பு இருக்காது என்பது தான் காரணம்.