திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி கேட்டுமுதல்வரை நேரில் சந்தித்து நடிகர் விஜய் கேட்டுக்கொண்ட நிலையில், அதற்கு அனுமதி அளிக்கப்படாததால் திரைத் துறையினர் ஏமாற்றத்தில் உள்ளனர்.
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாஸ்டர்’ திரைப்படத்தை பொங்கல் வெளியீடாக திரைக்கு கொண்டுவர படக்குழு முனைப்புடன் பணியாற்றி வருகிறது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு முதல்வர் பழனிசாமியை நடிகர் விஜய் சந்தித்தார்.
திரையரங்குகளில் 50 சதவீத ரசிகர்களுக்கு மட்டுமே அனுமதி என்கிற சூழலை மாற்றி 100 சதவீத இருக்கைகளுக்கும் ரசிகர்களை அனுமதிக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார்.
இந்நிலையில், ஊரடங்கை கூடுதல் தளர்வுகளுடன் ஜனவரி 31 வரை நீட்டித்து முதல்வர் நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், திரைப்பட, சின்னத்திரை படப்பிடிப்புகளில், பணியாளர்கள் எண்ணிக்கைக்கு உச்ச வரம்பு இல்லை என்ற புதிய அறிவிப்பையும் முதல்வர் வெளியிட்டுள்ளார். ஆனால், திரையரங்குகளில் அனுமதிக்கப்படும் இருக்கைகள் 50 சதவீதம் என்றே நீடிக்கிறது.
ஊரடங்கு நீட்டிப்பு உத்தரவின்போது, திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும், ‘மாஸ்டர்’ படத்தை தொடர்ந்து ஒவ்வொரு திரைப்படமாக வெளியிடலாம் என்றும் திரைத்துறையினர் திட்டமிட்டிருந்தனர்.
இந்த நிலையில், விஜய் விடுத்த கோரிக்கை ஏற்கப்படாததால் திரையுலகினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.