டைரக்டர்கள் நடிகராவது புதுசு அல்ல. சமீபகாலமாக நிறைய டைரக்டர்கள் நடிகர்களாகி வருகிறார்கள்.
பி.வாசு, கே.எஸ்.ரவிகுமார், கவுதம் வாசுதேவ் மேனன், ஆர்.சுந்தர்ராஜன், டி.பி.கஜேந்திரன், செந்தில்நாதன், மனோபாலா, மனோஜ்குமார், அனுமோகன், ‘யார்’கண்ணன், ஆர்.என்.ஆர்.மனோகர் போன்றவர்களை உதாரணமாக கூறலாம்.
இந்த பட்டியலில் புதுசாக இடம்பிடித்து இருக்கிறார், டைரக்டர் கஸ்தூரிராஜா. இவருடைய மூத்த மகன் செல்வராகவன், தமிழ் பட உலகின் முன்னணி டைரக்டர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இளைய மகன் தனுஷ், பிரபல கதாநாயகர்களில் ஒருவராக இருக்கிறார்.
இந்த நிலையில், டைரக்டர் கஸ்தூரிராஜா நடிகராக மாறியிருக்கிறார். இவர், ராஜ்கிரண் நடித்த ‘என் ராசாவின் மனசுல’ படத்தின் மூலம் டைரக்டர் ஆனார். தொடர்ந்து, ‘ஆத்தா உன் கோவிலிலே’, ‘நாட்டுப்புற பாட்டு’, ‘வீரதாலாட்டு’, ‘எட்டுப்பட்டி ராசா’, ‘வீரம் வெளஞ்ச மண்ணு’ உள்பட 21 படங்களை டைரக்டு செய்து இருக்கிறார்.
நடிகரானது பற்றி டைரக்டர் கஸ்தூரிராஜா கூறும்போது, ‘நான் உதவி டைரக்டராக இருந்தபோது, சில படங்களில் நடித்து இருக்கிறேன். ‘மவுனமொழி’ என்ற படத்தின் மூலம் முழுநேர நடிகராகி விட்டேன். எனக்கு கனமான வேடங்களும் பிடிக்கும். காமெடி கதாபாத்திரங்களும் பிடிக்கும். எல்லா வேடங்களிலும் நடிக்க விரும்புகிறேன்” என்கிறார்.