தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் தலையீடு காரணமாக கிழக்கு மாகாண மக்களின் மிக முக்கிய பிரச்சனைகளில் ஒன்றுக்கு தீர்வு கிடைத்துள்ளது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் காணப்படுகின்ற புதிய இருதயவியல் பிரிவின் ஆய்வகத்திற்கு (Cardiology Unit – Cardiac Catheterization Laboratory) இரு கிழமைகளில் வர இருந்த வைத்திய இயந்திர உபகரணங்களை (இதய வடிகுழாய் மற்றும் ஆஞ்சியோகிராம்) இடைநிறுத்தி அதனை களுத்துறை மாவட்டத்திற்கு மாற்றியமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இது தொடர்பான விடயத்தினை கையாளும் விவகாரம் இரா.சாணக்கியனிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்மந்தனினால் வழங்கப்பட்டது.
இதனையடுத்து இரா.சாணக்கியன் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் ஆகியோர் இன்று பிரதமர் மகிந்த ராஜபக்க்ஷவினை சந்தித்து இவ் விடயம் தொடர்பாக கலந்துரையாடியிருந்தனர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இருதயவியல் பிரிவிற்கு கொண்டுவரப்பட வேண்டிய உபகரணங்கள் அனைத்தும் முன்னமே தீர்மானித்தபடி எமது வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட வேண்டுமென இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதுகுறித்து அவதானம் செலுத்திய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சுகாதார அமைச்சர் பவித்திர வன்னியாரச்சியினை வரவழைத்து இருதயவியல் பிரிவிற்கான உபகரணங்களை உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கையளிப்பதற்கான செயற்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டுமென உத்தரவிட்டார்.
இதுகுறித்து கருத்து வெளியிட்ட இரா.சாணக்கியன், “கிழக்கு மாகாணத்தில் எந்தவொரு வைத்தியசாலையிலும் இவ் உபகரணம் இல்லாமையினால் பல வருடங்களாக மக்கள் உரிய நேரத்திற்கு சிகிச்சையின்றி பல சிரமங்களுக்கும் மத்தியில் வெளி மாகாணங்களுக்குச் சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் காப்பாற்றப்பட்டிருக்க வேண்டிய பல உயிர்களை இழந்துள்ளோம்.
இப் பிரச்சினை இனி முடிவுக்கு கொண்டுவரப்படும். எமது கட்சி மற்றும் எனது செயல்பாடுகள் அனைத்தும் எமது மக்கள் சார்ந்ததாகவே என்றும் இருக்கும். நாம் வாய்ச்சொல் வீரர்களல்ல.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.