தந்தை எஸ்ஏசியுடன் விஜய் மீண்டும் மோதல்

புதிதாக கட்சி தொடங்கும் நடவடிக்கையில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் ஈடுபட்டுள்ளதால், எஸ்ஏசி – மகன் விஜய் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது.
இயக்குநரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு விஜய் ரசிகர் மன்ற அதிருப்தி நிர்வாகிகளுடன் நடத்திய ஆலோசனைக்கு பிறகு, புதிய கட்சியை தொடங்க முடிவெடுத்தார். இதற்கான அறிவிப்பை வரும் 14-ம் தேதி வெளியிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேபோல, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு எஸ்ஏசி ஒரு அரசியல் கட்சியை பதிவு செய்தபோது, விஜய் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ‘‘எனக்கும் அந்த கட்சிக்கும் எந்த தொடர்பும் கிடையாது. என் ரசிகர்கள் யாரும் அந்த கட்சியில் சேரக் கூடாது’’ என்று அறிவித்தார். எஸ்ஏசி நியமித்த நிர்வாகிகள் அனைவரையும் நீக்கிவிட்டு, புதிய நிர்வாகிகளை நியமித்தார். தனது இயக்கத்தின் பெயர், கொடி, புகைப்படம் உள்ளிட்டவற்றை சம்பந்தம் இல்லாதவர்கள் பயன்படுத்தினால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார். எஸ்ஏசி தரப்பில் இருந்து உருவாகும் பிரச்சினைகளை எதிர்கொள்ள தனியாக ஒரு குழுவையும் நியமித்தார்.
இந்நிலையில், கட்சி தொடங்குவதாக எஸ்ஏசி அறிவித்துள்ள நிலையில், மீண்டும் இரு தரப்புக்கும் மோதல் வெடித்துள்ளது. அப்பா மீண்டும் புதிய கட்சி தொடங்க திட்டமிட்டுள்ளாரே? என்று விஜய் தரப்பில் கேட்டபோது, ‘‘இயக்குநர் எஸ்ஏசியின் கட்சிக்கு எந்த ஆதரவும் இல்லை. நடிகர் விஜய்யை பொருத்தவரை அப்பாவின் கட்சிக்கு ஆதரவு இல்லை என்ற அதே நிலைப்பாட்டில்தான் இப்போதும் இருக்கிறார்’’ என்றனர்.
இதற்கிடையில், எஸ்ஏசி – விஜய் இடையே எந்த மனக்கசப்பும் இல்லை என்பதுபோலவும் செய்தி வெளியானது. கடந்த 25-ம் தேதி
கிறிஸ்துமஸ் அன்றுகூட மகன் விஜய்யை எஸ்ஏசி சந்தித்ததாகவும், அப்போது தந்தைக்கு விஜய் தங்க மோதிரம் பரிசளித்ததாகவும் எஸ்ஏசி தரப்பில் கூறப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.
இதுவும் விஜய் தரப்பில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் சுமுகமாக இருப்பதாக எஸ்ஏசி தரப்பு திட்டமிட்டு தகவல் பரப்புவதாக விஜய் தரப்பினர் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுதொடர்பாக அவர்கள் கூறியபோது, ‘‘எஸ்ஏசியும், விஜய்யும் சந்தித்து 6 மாதங்கள் ஆகின்றன. அவர் தொடங்க உள்ள புதிய கட்சிக்கும், விஜய்க்கும் எந்த தொடர்பும் இல்லை. அதனால் தேவையில்லாத வதந்தியை யாரும் நம்ப வேண்டாம்’’ என்றனர்.

Related posts