தமிழீழ விடுதலைப் புலிகள் தகவல் தொழில்நுட்பத்துறையில் அரசாங்கத்தை விடவும் முன்னிலை வகித்தனர் என பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (07) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு கருத்து வெளியிட்ட அவர், ´உலகத்தில் வாழும் அனைவருக்கும் எனது இனிய ஆங்கில புது வருட நல்வாழ்த்துக்கள். இன்று நான் பேச எடுத்துக்கொண்ட விடயம் புலமைசார் சொத்து (Intellectual Property) பற்றியது. அதற்கு முன் நான் ஒரு விடயம் பற்றி கவனத்தில் கொண்டுவர உள்ளேன். அதாவது கொழும்பு மற்றும் மத்தள சர்வதேச விமான நிலையமாக தெரிவு செய்யப்பட்ட போதிலும் ஏன் யாழ்ப்பாண விமான நிலையம் தெரிவு செய்யப்படவில்லை? இதனோடு சார்ந்தவர்கள் இதற்கான விளக்கத்தை எனது உரை முடிந்ததும் தெரிவியுங்கள்.
அடுத்ததாக புலமைசார் சொத்து (Intellectual Property) ஏற்கனவே 2003 ஆம் ஆண்டளவில் அமுல்படுத்தப்பட்ட 63 ஆவது திருத்தச்சட்டத்துக்கு அமைவாக பல தரப்பட்ட மாற்றங்கள் நடந்த போதிலும் அவை எவ்வகையான பாரிய தாக்கத்தையும் உண்டு பண்ணியதாக தெரியவில்லை. அதிலும் தேசிய புலமைசார் சொத்து அலுவலக அறிக்கையின் படி 2009 ஆவது ஆண்டளவில் 353 திட்ட ஆய்வறிக்கைகளில் 39 காப்புரிமைகள் சேர்த்துக்கொள்ளப்பட்டது.
அடுத்து 2020 ஆவணி வரையில் 248 திட்ட ஆய்வறிக்கைகளில் 17 காப்புரிமைகள் சேர்த்துக்கொள்ளப்பட்டது. ஆனால் நாம் இங்கு 21 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றோம். ஆனால் எம்மால் கிட்டத்தட்ட 250 காப்புரிமைகள் தான் பெறப்பட்டுள்ளது.
இதிலிருந்து விளங்கிக்கொள்வது யாதெனில் எமது அரசாங்கம் இவ்வளவு காலமாக இவ்வாறான தகவல் தொழில்நுட்பம் மற்றும் புலைமைசார் சொத்து என்பவற்றுக்கான முதலீடுகளை சரியான முறையில் செய்வதில் இருந்து தவறியுள்ளது.
புலைமைசார் சொத்து என்பதனை எடுத்துக்கொள்வோமாயின் அவை தரவுத்தளமாகவோ அல்லது வன் மற்றும் மென் பொருட்களாகவோ காணப்படலாம். நாம் இதில் முதலீடுகள் செய்யாமலிருந்தால் எப்படி இவ்வாறான விடயங்களை எம்மவர்களிடம் இருந்து பெற முடியும்.
லண்டன் பொருளாதார நிறுவன 2018 தரவுகளின் அடிப்படையில் 135 சர்வதேச தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் மூன்றில் ஒரு பங்கு ஆசியாவில் அவர்களின் கிளைகளை விஸ்தரித்தனர். அதில் இலங்கையில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தினர் என்று உங்களுக்கு தெரியுமா…?
2016 இல் எமது தொழிலாளர்களில் ஒரே ஒரு வீதம் மாத்திரம் இவ் தொழில்நுட்ப துறையில் தாக்கம் செலுத்தினர். ஆனால் இந்தியாவும் மலேசியாவும் இதனை வினைத்திறனாக பாவித்தனர்.
அதனால் அவர்களின் தேசிய வருமானத்தில் இத் தொழில்நுட்ப துறை பாரியளவு பங்கு வகிக்கின்றது. நாம் இங்கு இவ்வாறான தொழில்நுட்பங்களை உபயோகித்து வேலைவாய்ப்புகளை உருவாக்குவதனை பார்க்காமல் அரசியல் விளையாட்டுகளுக்கான வாய்ப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்துகின்றார்கள்.
அதிலும் எமது நாட்டில் இன்னும் அத்தியாவசிய தேவையான Pay Pal ற்கு எமது நாட்டில் அங்கீகாரம் அளிக்கவில்லை. இதன் மூலம் நாம் பணம் பெற்றுக்கொள்வது தடுக்கப்படுள்ளது. இதனால் பல தொழில்முனைவோர் இணைய வர்த்தக நடவடிக்கைகளில் பெரும் சிக்கல்களை எதிர் நோக்குகின்றனர்.
கடந்த 2003ஆம் ஆண்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் வன்னி Tech என்ற ஓர் தகவல் தொழில்நுட்பத் திட்டத்தை அறிமுகம் செய்தனர். அதில் சிலிக்கான் வேலியிலுள்ளவர்களின் (silicon valley) ஆலோசனைகளின் அடிப்படையில் பாரிய IT Park திட்டம் ஒன்று கொண்டுவரப்பட்டது. அவர்களின் ஆற்றலுக்கு நிகரான இவ்வாறான திட்டங்கள் இதுவரையில் நாட்டில் கிடையாது. தமிழீழ விடுதலைப் புலிகளை ஓர் பயங்கரவாத இயக்கம் என்று கூறினாலும், தகவல் தொழில்நுட்பத்துறையில் புலிகள் அரசாங்கத்தை விட முன்னணியில் இருந்தனர்.
வன்னி Tech தொடர்பிலான தகவல்களை நான் சபையில் ஆவணப்படுத்துகின்றேன். இதனோடு சம்பந்தப்பட்டவர்கள் இதனை பார்க்கலாம். அத்துடன் மட்டக்களப்பை சார்ந்த சஞ்சீவன் என்னும் நபர் நீருக்கு அடியில் சென்று தகவல்களை சேகரிக்கும் ஓர் கண்டுபிடிப்பை செய்து இருந்தார். இதற்கான காப்புரிமையும் பெற்றுள்ளார். இப்படியானவர்களை ஊக்குவித்து எமது நாட்டின் வளர்ச்சியில் பங்காற்ற வைக்க வேண்டும்.
இவ்வாறான கண்டுபிடிப்புக்களை மேற்கொண்டவர்களை பாராளுமன்றம் அழைத்து இதுவரையில் நாம் பாராட்டுத் தெரிவிக்கவில்லை. ஆனால் Covid19 பாணி மருந்தினைக் கண்டுபிடித்தவரை பாராளுமன்றம் அழைத்து வருவதுடன்; பாராளுமன்றத்துடன் தொடர்பான சிலர் அந்த மருந்தினை அருந்தியிருந்தனர்.
இவையனைத்தும் அரசியல் தந்திரங்கள் என்றே கூற வேண்டும். ஊடகங்களும் இச் செய்தியைப் வெளியிட்டிருந்தது. இவ்வாறான போலியான தகவல்களை ஊடகங்கள் பரப்பக் கூடாது எனக் கேட்டுக் கொள்கின்றேன்.
நான் கடைசிக்கிழமை மலையகம் சென்று இருந்தேன். நான் சென்ற இடத்தில் சில பெண்பிள்ளைகள் தலா 300 ரூபாய் செலவழித்து இணையவசதி கிடைக்கும் இடத்திற்கு சென்று அவர்களில் அவர்களின் கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.
எமது அரசாங்கம் இவ்வாறான விடயங்களுக்கு பணத்தை முதலிடாமல் எதற்கு முதலிடபோகின்றார்கள்? இலவச WiFi போன்றவற்றை எப்போது அமுல்படுத்தப்போகின்றார்கள்?
கடைசியாக நடந்த Coop கூட்டத்தில் இலங்கையில் தகவல் தொடர்பு தொழில்நுட்ப முகவர் நிறுவனமான ICTA வுடனான சந்திப்பில் அவர்களுக்கான நிதி ஒதுக்கீடானது கிட்டத்தட்ட 17 மில்லியன் அமெரிக்க டொலராகும். அதுவும் 2003 ஆம் ஆண்டளவில் இருந்து. அப் பணம் எங்கு போனது? அதிலும் அக் கூட்டத்தில் ஓர் திட்டமான கிராம சேவகர்களுக்கான செயலியை செய்வதற்கான ஓர் ஆலோசனையும் வழங்கி இருந்தேன்.
அடுத்து மிக பிரதான இத் தகவல் தொழில்நுட்ப விடயத்தை எடுத்துக்கொண்டோமாயின் இவ் TRC பற்றியது. எமது முந்தைய அரசானது TRC யிலேயே தமது அதிக ஆர்வத்தினை வெளிக்காட்டி இருந்தனர். சென்ற வருடம் ஆட்சி செய்த அரசாங்கம் Wi-Fi வசதிகளை வழங்குவதாக கூறியிருந்தும் அது நடைமுறைக்கு கொண்டுவரப்படவில்லை.
அதிலும் முன்னைய ஜனாதிபதி மைத்திரி அவர்கள் தனது சகோதரனையே இவ் TRC நிறுவனத்திற்கு தலைவராக நியமித்து இருந்தார். தற்போதைய ஜனாதிபதி தொழில்நுட்ப ரீதியில் சிந்தித்து TRC இற்கென அமைச்சொன்றினை உருவாக்கியுள்ளார். TRC இற்கென அதிக முக்கியத்துவம் கொடுப்பதற்கான காரணங்கள் எனக்குத் தெரியவில்லை.
TRC மூலம் கிடைக்கும் நன்மைகள் பற்றி மக்களாகிய நீங்கள் தேடிப் பார்க்க வேண்டும். TRC போன்ற விடயங்களில் அவதானத்துடன் செயற்படும் இந்த அரசாங்கம் IT சம்மந்தப்பட்ட விடயங்களில் அதிக கவனத்தினைச் செலுத்துவதில்லை. IT சம்மந்தமான விவாதங்கள் இன்றும் இடம்பெறா வண்ணம் இருப்பதையே அவதானிக்கக் கூடியாத உள்ளது.
பட்டதாரிகள் 1இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பினை வழங்குவதாக கூறுகின்றனர். வெளிநாடுகளிலும், இலங்கையிலும் கல்விகற்ற பட்டதாரிகள் பலர் உள்ளனர். ஆனால் இன்னும் அவர்களுக்கு வேலைவாய்ப்புக்கள் வழங்கப்படவில்லை.
வறுமை நிலையிலுள்ள குடும்பங்களுக்கு வேலைவாய்ப்புக்கள் வழங்குவதாக கூறுகின்றனர். ஆனால் இலஞ்சம் வாங்கிக் கொண்டு பணம் படைத்தவர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்குகின்றனர். இவற்றை கருத்திலெடுத்து ஆராய வேண்டும். IT துறையினை வளர்சிபெறச் செய்து வேலைவாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும்.
இங்கு நான் கூறிய அனைத்து விடயங்களும் முக்கியமானதாகும். எமது நாட்டின் அபிவிருத்தியின் எதிர்காலத்தில் முக்கிய பங்காற்றவுள்ளது இத் தகவல் தொழில்நுட்ப துறையாகும்.
மற்றும் வீடில்லாத குடும்பங்களுக்கு மாத்திரமே வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கின்றேன்.
அத்துடன் மட்டக்களப்பில் சில நாட்களுக்கு முன்னர் அரச வேலை வாய்ப்புக்கான நேர்முகத் தேர்வில் கறுப்பு நிற சேலை அணிந்து 5 பெண்கள் சென்றிருந்தனர். இவர்கள் ஒரு மட்டக்களப்பு அமைச்சரின் சிபார்சில் வந்தவர்கள்.
இவர்களுக்கு நிச்சயம் அரச வேலைவாய்ப்பு கிடைக்குமென்று சென்றிருந்தார்கள். இது மிகவும் தவறான விடயமென்றே கூற வேண்டும் சம்பந்தப்பட்டவர்களுக்கு புரியும் என்று நினைக்கின்றேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.