ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தி
உழவர் திருநாளான தைப்பொங்கல், உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்களின் முதன்மையான சமய மற்றும் கலாசார பண்டிகையாகும்.
இது இயற்கையுடன் பிணைந்த, விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட பாரம்பரிய வாழ்க்கை முறையையும் பயிர்களுக்கு வளம் சேர்த்த சூரியனுக்கு நன்றி செலுத்துவதையும் குறிக்கிறது. இந்து சமயத்தின்படி வாழும் தமிழ் மக்கள் தைத்திருநாளை தங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் ஒரு புதிய ஆண்டின் விடியலாக கருதுகின்றனர். அந்த மகிழ்ச்சியை கொண்டாடும் எமது நாட்டின் சகோதர தமிழ் மக்களுடன் நானும் மகிழ்ச்சியுடன் இணைந்து கொள்கிறேன்.
விளைச்சலின் மூலம் கிடைக்கும் புத்தரிசியை பாலுடன் சேர்த்து பொங்க வைத்து தங்களுக்கும், தங்கள் குடும்பத்திற்கும், நாட்டிற்கும், முழு உலகிற்கும் சுபீட்சம் கிட்ட வேண்டும் என்று அவர்கள் பிரார்த்திக்கின்றனர். இன, மத பேதமின்றி இலங்கை மக்கள் அனைவருக்கும் சுபீட்சத்தை கொண்டுவருவது என்னுடையவும் எமது அரசாங்கத்தினதும் ஒரே நோக்கமாகும்.
இந்த உன்னதமான நோக்கத்தை அடைந்துகொள்வதற்கான வழிவகைகள் எமது அரசாங்கத்தின் நாட்டைக் கட்டியெழுப்பும் ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கைத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. நன்றியுணர்வு என்பது இலங்கை சமூகத்தின் ஒரு தனித்துவமான பண்பாகும். அறுவடையின் முதல் பகுதியை சூரியனுக்கு படைக்கும் தைப்பொங்கல் பண்டிகை, பழங்காலத்திலிருந்தே நம் சமூகம் மதித்து வரும் விழுமியங்களை குறிக்கிறது. இதன் காரணமாக தைப்பொங்கல் பண்டிகை தேசிய கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக மாறியுள்ளது.
மனித சமூகத்தின் உன்னதமான நன்னெறிகளை குறிக்கும் வகையில், தைப்பொங்கல் திருநாளை கொண்டாடும் இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
——
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தி
உலகம் முழுவதுமுள்ள தமிழ் மக்கள் தைமாதத்தில் கொண்டாடும் தைத்திருநாள் மத, கலாசார மற்றும் சமூக ரீதியாக மிகவும் முக்கியமான மகிமை பொருந்திய நாளாகும். தமிழர்களினால் கொண்டாடப்படும் பண்டிகைகளில் தலைசிறந்ததாகவும் உயர்வானதாகவும் தைப்பொங்கல் பண்டிகை போற்றப்படுகின்றது. தமது உழைப்புக்கு உதவிய இயற்கைக்கு நன்றியுணர்வை தெரிவிக்கும் திருநாளாக தைப்பொங்கல் விளங்குகின்றது. இந்தத் தைப்பொங்கல் திருநாளில் உழவர்கள் தமது வேளாண்மைக்கு உதவி செய்த சூரிய பகவானுக்கு நன்றி செலுத்துகின்றனர். இதற்காக அவர்கள் சூரியன் உதிக்கும் வேளையில் அவனுக்காக பொங்கலிட்டு தமது நன்றியை வெளிக்காட்டுக்கின்றனர். உழவர்கள் மாத்திரமல்லாமல் ஒவ்வொரு மனிதப் பிறவியும் சூரியனுக்கு நன்றி கூறும் நாளாக இன்றைய நாள் போற்றப்படுகிறது.
இயற்கையின் பெறுமதி சமத்துவத்திற்கு மதிப்பளிக்க வேண்டியதன் முக்கியத்துவம், நன்றி தெரிவிக்கும் உயரிய பண்பு போன்ற அனைத்து மதங்களினதும் மனித நேயக்கருத்துக்களை தைப்பொங்கல் பண்டிகை எமக்கு எடுத்தியம்புகின்றது.
இலங்கையர்களாகிய நாம் அனைவரும் இனம், மதம், மொழி ஆகியவற்றினால் வேறுபட்டிருந்தாலும்கூட எங்கள் அனைவரினதும் எண்ணங்களும் எதிர்பார்ப்புக்களும் ஒன்றாகும்.நாட்டைக் கட்டியெழுப்பும் ‘சுபீட்சத்தின் நோக்கு’ என்ற உன்னத இலட்சியத்துடன் இலங்கை மக்களது வாழ்க்கையை முன்னேற்றிச் செல்லும் இத்தருணத்தில் இலங்கை மற்றும் உலகெங்குமுள்ள தமிழா்கள் உவகையுடன் கொண்டாடும் இப்பொங்கல் திருநாளானது மகிழ்ச்சிகரமாக, நன்றி செலுத்துகின்ற, மற்றும் மீளமைப்பிற்கான மக்கள் திருநாளாக அமைந்து, தமிழ் மக்களும், ஏனைய சமூகத்தவா்ககளும் ஒன்றுபட்டு எதிர்கால இலங்கையின் சமாதானத்திற்காக உறுதிபூணும் ஒரு தேசிய நல்லிணக்க தினமாக அமைகின்றது.
மக்கள் அனைவரதும் எதிர்கால வாழ்வில் சகல எதிர்பார்ப்புகளும் நிறைவேறி சாந்தியும், சமாதானத்துடனும், சௌபாக்கியத்துடனும் வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தனை செய்கின்றேன்.
இந்த மகிழ்ச்சியான நன்நாளில் தைப் பொங்கல் பண்டிகையை கொண்டாடிடும் சகோதர தமிழ் மக்களுக்கு எனது உளப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
—–
அமைச்சர் டக்ளஸின் பொங்கல் தின வாழ்த்து செய்தி
எமது மக்களின் வாழ்விடங்களிலும், ஒவ்வொரு இல்லங்களிலும் புது மகிழ்ச்சி பொங்கிடும் என்ற பெரு நம்பிக்கையோடு பிறந்திருக்கும் தைப்பொங்கல் திருநாளை அகம் மகிழ்ந்து வரவேற்போம் என்று ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானாந்தா அவர்கள் தனது பொங்கல் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த வாழ்த்து செய்தியில்..
உழவர் திருநாள் என்றும் தமிழர் பெருநாள் என்றும் தைப்பொங்கல் தினத்தை கொண்டாடி வரும் எமது மக்கள்,
இயற்கையை வணங்கிய எமது முன்னோர்கள் வழிநின்று தமிழர் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றாகவும் காலந்தோறும் பாதுகாத்து வருகின்றனர்.
வாழ்வெங்கும் வலி சுமந்த எமது மக்கள் தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கையில் பிறந்திருக்கும் தைப்பொங்கல் திருநாள் தம் வாழ்வில் புது மகிழ்வை தந்திடும் என்று எத்திர்பார்ப்பதை நான் உணர்கின்றேன்.
சூரியனுக்கு நன்றி செலுத்தும் பண்பாட்டை கொண்ட எமது மக்கள்
மலர்ந்து மறையாக ஒளிச்சுடராக தம்முடன் வாழ்ந்து தமது துயர் துடைப்பவர்களுக்கு நன்றி செலுத்தும் பண்பாட்டையும் மேலும் வளர்க்க வேண்டும்!
வல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே என்று பாரதி பாடியது போல், தமிழ் மக்கள் எதிர் கொள்ளும் சகல உரிமைகளையும் வென்றெடுத்து
தமிழர் தேசமெங்கும் ஒளியேற்ற எம்மிடம் உள்ள வல்லமைக்கு பலம் வேண்டும்.
எமது வல்லமைக்கு பலம் சேர்க்கும் மாபெரும் சக்தியாக தமிழ் மக்கள் திரண்டு விட்டால் யாமார்க்கும் அடிமையல்லோம் யமனை அஞ்சோம்இ நரகத்தில் இனி இடர் படோம் என தமிழ் மக்கள் நிமிர்ந்தெழும் காலம் இங்கு உருவாகும்!.
கொடிய நோய் பிணிகள் தீர்ந்து எமது மக்கள் குதூகலித்து வாழவேண்டும்.
பதட்டங்களும், அச்சம் தரும் சூழலும் இனியிங்கு இல்லையென்ற நிலை நீடித்து நிலவ வேண்டும்> வறுமையற்ற வாழ்வு மலர வேண்டும். உழைக்கும் மக்களின் வாழ்வுயர வேண்டும். வீடற்ற மக்களுக்கு வீடுகளும், நிலமற்ற மக்களுக்கு காணி நிலங்களும் வேண்டும். உறவுகளை இழந்து தவிக்கும் எமது மக்களின் கண்ணீருக்கு பரிகாரம் வேண்டும்.
எம் மக்களின் உறவுகள் சிறை மீண்டு வர வேண்டும். இறந்த உறவுகளுக்கு நீதிச்சட்டங்களை ஏற்று அஞ்சலி செலுத்தும் எமது மக்களின் ஆழ்மன உணர்வுகள் மதிப்பளிக்கப்பட வேண்டும்!
எமக்கென்றொரு கனவுண்டு> அது தமிழ் மக்களின் நிரந்தர அரசியல் தீர்வாகும்.. அது நிறைவேற வேண்டும்!
எமது மக்களின் இத்தனை கனவுகளுக்கு மத்தியிலும் இன்னொரு தைப்பொங்கல் திருநாள் இன்று பிறந்திருக்கிறது!..
நேற்று என்பது உடைந்த பானை!இ. நாளை என்பது மதில் மேல் பூனை!!
இன்று என்பது கையில் உள்ள வீணை!!!
இந்த முது மொழியின் நம்பிக்கையோடு தமிழர் பண்பாட்டு அடையாளமாக திகழும் தைப்பொங்கல் திருநாளை அகமகிழ்ந்து வரவேற்போம்!..
கல்லோடு கட்டி எம்மை கடலிலே எறிய எவர் நினைத்தாலும் தமிழ் மக்களை கரையேற்றும் கப்பலாகவே நாம் மிதந்து வருகின்றோம்!
இவ்வாறு தனது தைப்பொங்கல் வாழ்த்து செய்தியில் தெரிவித்திருக்கும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எமது மக்களின் கனவுகளை வெல்லும் யதார்த்த பூர்வமான வழி நோக்கி ஒட்டு மொத்த எமது மக்கள் அனைவரும் தமது புதிய பயணத்தை தொடங்கும் பொங்கல் தினமாக இது அமையட்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
—-