மாஸ்டர் திரைப்பட வெளியீட்டின்போது விதிமுறைகளை மீறிய 10 திரையரங்குகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாஸ்டர்’. 2020-ம் ஆண்டு ஏப்ரல் வெளியீடாகத் திட்டமிடப்பட்டது. ஆனால், கரோனா அச்சுறுத்தலால் திட்டமிட்டபடி வெளியாகவில்லை.
சுமார் 10 மாதங்களாக வெளியிடாமல் காத்திருந்தது. நவம்பர் மாதம் திரையரங்குகள் திறக்கப்பட்டாலும், கரோனா அச்சுறுத்தல் இன்னும் குறையட்டும் என்று ‘மாஸ்டர்’ படக்குழு காத்திருந்தது. இறுதியாக பொங்கல் வெளியீடாக நேற்று (ஜனவரி 13) படம் உலகம் முழுவதும் வெளியானது. சென்னையில் உள்ள பல்வேறு திரையரங்குகளில் காலை மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது. சில திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே நிரப்பப்பட்டு சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டாலும், பெரும்பாலான திரையரங்குகளில் ரசிகர் கூட்டம் முண்டியடித்தது.
இந்நிலையில் சென்னை ஜாஃபர்கான்பேட்டை, அயனாவரம், கோயம்பேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள விதிமுறைகளை பின்பற்றாத 10 திரையரங்குகள் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 188 (அரசு ஊழியரால் அறிவிக்கப்பட்ட உத்தரவுக்கு கீழ்ப்படியாமை) பிரிவு 269 (உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நோயை பரப்பும் வகையில் அலட்சியமாக செயல்படுதல்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் சில திரையரங்குகளுக்கு ரூ.5000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து காவல்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளை மட்டும் நிரப்புவோம் என்றும் அனைத்து கரோனா விதிமுறைகளையும் பின்பற்றுவோம் என்று திரையரங்க உரிமையாளர்களிடம் நாங்கள் எழுத்துப் பூர்வமாக எழுதி வாங்கியுள்ளோம். மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வாலின் வழிகாட்டுதலின் படி, துணை ஆணையர்கள் திரையரங்குகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். எங்கெல்லாம் விதிமுறைகள் பின்பற்றப்பட வில்லையோ அந்த திரையரங்குகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இவ்வாறு அவர் கூறினார்.