ஜல்லிக்கட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு யோகேஸ்வரன் நினைவாகப் பரிசு வழங்கவுள்ளதாக லாரன்ஸ் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் அலங்காநல்லூர், அவனியாபுரம், சிராவயல், பெரியகலையம்புத்தூர் உள்ளிட்ட பல ஊர்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற காளைகள் மற்றும் காளைகளை அடங்கிய வீரர்களுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.
ஜல்லிக்கட்டுக்காக நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் முக்கியமானவர் லாரன்ஸ். தற்போது நடைபெற்று வரும் போட்டிகள் குறித்து லாரன்ஸ் தனது ட்விட்டர் பதிவில், “இதுவரை தமிழ்நாட்டில் நடந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்றுச் சிறந்த வீரர்களாகத் தேர்வு செய்யப்பட்ட திருநாவுக்கரசு, விஜய், கார்த்திக், கண்ணன் ஆகியோருக்கும் மற்றும் சிறந்த காளைகளுக்காகப் பரிசுகள் வாங்கிய சந்தோஷ், ஜி.ஆர்.கார்த்திக் ஆகியோருக்கும் மற்றும் பங்கு பெற்ற அனைவருக்கும், இனிமேல் நடக்கும் போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பெறப்போகும் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார் லாரன்ஸ்.
இதனைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது மரணமடைந்த யோகேஸ்வரன் நினைவாகப் பரிசு ஒன்றை அறிவித்துள்ளார் லாரன்ஸ்.இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
“தமிழனின் வீர அடையாளமான இந்த ஜல்லிக்கட்டு காட்சிகளைப் பார்க்கும்பொழுது ஆயிரக்கணக்கான இளைஞர்கள், பொதுமக்கள் ஜல்லிக்கட்டுக்காக உணர்வுரீதியாகப் போராடியதையும், பல அரசியல் தலைவர்கள் சட்ட ரீதியாகப் போராடி வெற்றி பெற்றதையும், இந்த மாபெரும் நிகழ்வில் என்னுடைய சிறு பங்கு இருந்ததையும் நினைத்துப் பார்க்கிறேன்.
போராட்டத்தின் போது ரயில் மீது ஏறி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சேலத்தைச் சேர்ந்த யோகேஸ்வரன் குடும்பத்தின் விருப்பத்திற்காக ஒரு மகன் என்ற நிலையிலிருந்து ஒரு நிலம் வாங்கி வீடு கட்டி தந்துள்ளேன்.
அதோடு இல்லாமல் யோகேஸ்வரனை என்றளவும் நினைவு கூறும் விதமாக இப்பொழுது ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் இனிவரும் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கும் இனிமேல் ஒவ்வொரு வருடமும் அவன் பெயர் பொறித்த தங்கக் காசுகளைப் பரிசாக வழங்க முடிவு செய்துள்ளேன்”
இவ்வாறு லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.