கமல்ஹாசனுக்கு நடந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது என்றும், தற்போது அவர் நலமுடன் இருக்கிறார் என்றும் அவருடைய மகள்கள் தெரிவித்தனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சிறு விபத்தினால் நடிகர் கமல்ஹாசனின் காலில் சிறு எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் அவரது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இதனிடையே கட்சி பணி, மற்றும் ‘பிக் பாஸ்’ உள்ளிட்ட பணிகளில் தொடர்ந்து கமல்ஹாசன் கவனம் செலுத்தி வந்தார்.
அறுவை சிகிச்சை
இரு தினங்களுக்கு முன்பு தனது காலில் தொடர்ந்து வலி இருந்து வருவதாகவும், இதனால் மீண்டும் ஒரு சிறு அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருப்பதாகவும், சில நாட்கள் ஓய்வு எடுக்கப்போவதாகவும் கமல்ஹாசன் தெரிவித்து இருந்தார்.
இதனை தொடர்ந்து சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் கமல்ஹாசன் அனுமதிக்கப்பட்டார். அவரது வலது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அவர் விரைவில் மீண்டு வர ரசிகர்கள், மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி தொண்டர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.
வெற்றிகரமாக முடிந்தது
இந்நிலையில் ராமச்சந்திரா மருத்துவமனை சார்பில் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘கமல்ஹாசனுக்கு ஏற்கனவே ஆபரேசன் செய்யப்பட்ட வலது காலில் லேசான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வலது கால் எலும்பில் ஏற்பட்ட அந்த பாதிப்பை சரி செய்வதற்காக நடத்தப்பட்ட அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்துள்ளது. அவர் விரைவில் அதில் இருந்து குணமடைந்து வருவார்’ என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மகள்கள் அறிக்கை
இந்நிலையில் கமல்ஹாசனுக்கு காலில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்ததாக அவரது மகள்கள் ஸ்ருதி மற்றும் அக்ஷரா இருவரும் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ராமச்சந்திரா மருத்துவமனையில் டாக்டர் ஜே.எஸ்.என்.மூர்த்தி ஒருங்கிணைப்பில், எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் மோகன்குமார் தலைமையில் எங்கள் அப்பாவிற்கு காலில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அப்பா நலமாக, உற்சாகமாக இருக்கிறார்.
நன்றி
அப்பாவை டாக்டர்களும், மருத்துவ பணியாளர்களும், மருத்துவமனை நிர்வாகமும் நல்லமுறையில் பார்த்து கொள்கிறார்கள். விரைவில் அப்பா வீடு திரும்புவார். சில நாட்கள் ஓய்வுக்கு பின் மீண்டும் மக்களை சந்திப்பார்.
அனைவரது அன்புக்கும், பிரார்த்தனைகளுக்கும் எங்களது நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.