2021ஆம் ஆண்டின் இறுதிக்குள் நாட்டுக்குப் பொருத்தமான புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதற்காக அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்கும் பணி இடம்பெற்றுவது அனைவருக்கும் தெரிந்த விடயமாகும். நாட்டுக்குப் பொருத்தமான புதிய அரசியமைப்பை இவ்வருட இறுதிக்குள் உருவாக்கி அதனை நடைமுறைப்படுத்த எமது அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது.
மக்களுக்கு தேர்தல் வாக்குறுதியாக கொடுக்கப்பட்ட விடயங்களை 20ஆவது திருத்தச்சட்டத்துடன் தான் ஆரம்பித்திருந்தோம்.
நேரடியாக தீர்மானங்களை எடுப்பதற்கான திருத்தங்கள் மாத்திரமே 20ஆவது திருத்தச்சட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டிருந்தது. அதனுடன் நாம் நிற்கப்போவதில்லை. புதிய அரசியலமைப்பு தொடர்பிலான மக்களின் எதிர்பார்ப்பு அதனையும் விட உயர்வாக உள்ளது.
முழுமையான அரசியலமைப்பொன்றை உருவாக்கும் தேவையொன்றே தற்போது எமக்குள்ளது. 1978ஆம் ஆண்டுதான் தற்போதைய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டிருந்தது. 43வருடங்கள் இது நடைமுறையில் உள்ளது. தற்போது எமது நாடு பல மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளது. அன்று இருந்த சனத்தொகையல்ல இன்று உள்ளது. நாட்டின் அனைத்துத் துறைகளிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அரசியல், பொருளாதாரம், கலாசாரம் என அனைத்திலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதனால் சமகாலத்திற்கேற்ப ஓர் அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டியுள்ளது. இது காலத்தின் தேவையாகும். கட்டம் கட்டமாக புதிய அரசியலமைப்பை உருவாக்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு.
ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஸ் தி சில்வா தலைமையில் நிபுணர் குழுவொன்றை அதற்காக அமைத்துள்ளோம். குறித்த குழுவின் அறிக்கை எதிர்வரும் இரண்டு, மூன்று மாதங்களுக்குள் அரசாங்கத்துக்கு கிடைக்கப்பெறும்.
அடுத்தகட்டமாக பாராளுமன்ற தெரிவுக்குழுவை உருவாக்க வேண்டும். அனைத்து அரசியல் கட்சிகளினதும் உறுப்பினர்களுடன் அங்கத்துவத்துடன்தான் தெரிவுக்குழு உருவாக்கப்படும். பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் ஊடாக உருவாக்கப்படும் புதிய அரசியலமைப்புக்கான சட்ட
மூலம் பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். இந்த அனைத்துப் பணிகளையும் இவ்வருட இறுதிக்குள் முடிப்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். தமது யோசனைகளை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஸ் தி சில்வா தலைமையில் நிபுணர் குழு, அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் யோசனைகளை நாம் இந்தவாரம் சமர்ப்பிக்கவுள்ளோம். இதில் பிரதானமான யோசனையாக தேர்தல்முறை மாற்றுவது இருக்கும். அதேபோன்று விருப்ப வாக்குமுறையை ஒழிப்பதும் முக்கிய பிரச்சினையாகும். இடைத் தேர்தல்களை நடத்துவதும் எமது முக்கிய யோசனைகளில் ஒன்றாக இருக்கும் என்றார்.
சுப்பிரமணியம் நிஷாந்தன்