பிரபல கதாநாயகர்கள் அனைவரும் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் நடிப்பதை பெருமையாக கருதினார்கள்.
முரளி-சித்தாரா நடித்து, விக்ரமன் இயக்கத்தில், ‘புதுவசந்தம்’ படத்தை தயாரித்தவர் ஆர்.பி.சவுத்ரி. இவர் தயாரித்த முதல் படம், இது. இந்த படத்தின் வெற்றி அவரை தமிழ் பட உலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக உயர்த்தியது. பிரபல கதாநாயகர்கள் அனைவரும் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் நடிப்பதை பெருமையாக கருதினார்கள்.
ஒரு சில கதாநாயகர்களை தவிர, மற்ற கதாநாயகர்கள் அனைவரும் இந்த பட நிறுவனத்தில் நடித்தார்கள். சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.சவுத்ரி இதுவரை 90 படங்களை தயாரித்து இருக்கிறார். அவருடைய 90-வது படமாக ‘களத்தில் சந்திப்போம்’ விரைவில் திரைக்கு வர இருக்கிறது. அதில் ஜீவாவும், அருள்நிதியும் இணைந்து நடித்து இருக்கிறார்கள். ராஜசேகர் டைரக்டு செய்து இருக்கிறார்.
90 படங்களை தயாரித்த அனுபவங்கள் பற்றி ஆர்.பி.சவுத்ரி நிருபர்களிடம் கூறியதாவது:-
‘‘பொதுவாகவே ரசிகர்களின் சினிமா ரசனை மாறிவிட்டது. நான் படம் தயாரிக்க வந்தபோது, வருடத்துக்கு 75 படங்கள் தயாராகி திரைக்கு வந்தன. இப்போது வருடத்துக்கு சுமார் 300 படங்கள் வருகின்றன. இத்தனைக்கும் தயாரிப்பு செலவு அதிகரித்து விட்டது. சினிமா தற்போது இளைஞர்களை நம்பியே இருக்கிறது. அவர்கள்தான் தியேட்டருக்கு படம் பார்க்க வருகிறார்கள்.
90 படங்களை தயாரித்ததில் எனக்கு நிறைய அனுபவங்கள் இருக்கிறது. அந்த அனுபவத்தில் நான் சொன்ன யோசனைகளை ஏற்று படங்களை இயக்கிய டைரக்டர்கள் வெற்றி பெற்றுள்ளனர். கேட்காத டைரக்டர்கள் தோற்றுப்போய் இருக்கிறார்கள்.
‘களத்தில் சந்திப்போம்’ டைரக்டர் ராஜசேகர் திறமைசாலி. படம் முழுவதையும் நான் பார்த்து விட்டேன். நன்றாக வந்து இருக்கிறது. இது, 2 நண்பர்களை பற்றிய கதை. ஜீவாவுக்கும், அருள்நிதிக்கும் சமமான கதாபாத்திரங்கள்.
இந்த படத்தை 300 தியேட்டர்களில் திரையிட ஏற்பாடு நடந்து வருகிறது. விஜய் நடித்து திரைக்கு வந்துள்ள ‘மாஸ்டர்’ படம் இதற்கான நம்பிக்கையை கொடுத்து இருக்கிறது. கொரோனா பயம் மக்கள் மத்தியில் இருந்து போய்விட்டது.’’ இவ்வாறு ஆர்.பி.சவுத்ரி கூறினார்.