இசையமைப்பாளர் சங்க தலைவர் தினா சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறும்போது, “இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் அநீதி இழைத்துள்ளது.
கடந்த 45 ஆண்டு காலமாக இளையராஜா இசையோடு வாழ்ந்த ஸ்டுடியோ பிரசாத் ஸ்டுடியோ. அங்கு நுழையவிடாமல் தடுக்கப்பட்டார். அவர் இசை அமைத்த பாடல்கள் சம்பந்தமான குறிப்புகள், மத்திய, மாநில அரசுகள் வழங்கிய விருதுகள் சேதப்படுத்தப்பட்டு குப்பையாக குவிக்கப்பட்டிருந்தன. 45 ஆண்டுகாலம் பிரசாத் ஸ்டுடியோவில் இசைப்பணியை செய்தவரை நிர்வாகம் அவமானகரமாக வெளியேற்றியதை மத்திய, மாநில அரசுகள் வேடிக்கை பார்த்தன. இதனால் மன உளைச்சலில் இருக்கும் இளையராஜா மத்திய, மாநில அரசுகள் அவருக்கு வழங்கிய விருதுகளை திருப்பி அனுப்பும் மனநிலையில் இருக்கிறார். இது எங்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது” என்றார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு மறுப்பு தெரிவித்து இளையராஜா வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் “பேரன்புக்கு உரியவர்களே நான் சொல்லாத கருத்தை ஒரு தனிப்பட்ட நபரின் கருத்தை நான் சொன்னதாக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இது முற்றிலும் தவறு என்பதை நான் சொல்லிக் கொள்கிறேன். அப்படி ஒரு கருத்தை நான் வெளியிடவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பேசியுள்ளார்.