நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமையை கருத்தில் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் பெயரை தேசியப்பட்டியில் பாராளுமன்ற உறுப்பினராக பரிந்துரைக்குமாறு மகா சங்கத்தினர் கேட்டுள்ளதாக அந்த கட்சியின் தவிசாளர் வஜர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு தெரண 360 அரசியல் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.
கேள்வி: ரணில் விக்ரமசிங்கவை பாராளுமன்றம் அனுப்புமாறு கடந்த ஒருவாரத்திற்கு முன்னர் மகா சங்கத்தினரும் கூறியதாக நீங்கள் சொன்னீர்;கள். உங்களுக்கு அந்த தேரர்களின் பெயரை சொல்ல முடியுமா?
பதில்: எமது கட்சியுடன் தொடர்புகளை பேணி வரும் தேரர்களுடன் நான் இது குறித்து பேசியுள்ளேன். அவர்களின் நிலைப்பாடு என்னவெனில் தற்போதைய நாட்டு நிலைமையில் ரணில் விக்ரமசிங்க அவசியம் பாராளுமன்றம் செல்ல வேண்டும் என்பதேயாகும். ரணில் விக்கிரமசிங்கவை உடனடியாக பரிந்துரைக்க மறக்காதீர்கள் எனவும் அதற்காக எப்போது வேண்டுமானாலும் தங்கள் அறிவிப்பை வெளியிட தயார் எனவும் அவர்கள் கூறியுள்ளனர். அரசாங்கத்திற்கு சார்பான தேரர்களும், எம்முடன் தொடர்பில் இருக்கும் தேரர்களும் குறித்த நிலைப்பாட்டில் உள்ளனர்.
கேள்வி: கிடைத்த ஒரு போனஸ் ஆசனத்தை கூட நிரப்பிக்கொள்ள முடியவில்லையே? ஏன்
பதில்: ஐ.தே.க ஏகமனதாக ரணில் விக்ரமசிங்கவை பாராளுமன்றம் செல்லுமாறு கேட்டுள்ளது. ஆனால் அவர் அதனை நிராகரித்து வருகின்றார். சிலவேளை பாராளுமன்றத்தில் ஐ.தே.கவின் பிரதிநிதித்துவம் இல்லாது போனாலும் பாராளுமன்றத்திற்கு வெளியில் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும். தற்போதைய நிலையில் ஐ.தே.க உறுப்பினர்கள் எவரும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பெற்றுக்கொள்வார்கள் என நான் நினைக்கவில்லை. அரசரமின்றி தகுந்த நேரத்தில் ரணில் விக்ரமசிங்கவை பாராளுமன்றம் அனுப்புவோம்.