நிலுவைத் தொகையை செலுத்தத் தவறியதால் ஈரான் உட்பட ஏழு நாடுகள் ஐ.நா பொதுச் சபையில் வாக்களிக்கும் உரிமையை இழந்துவிட்டதாக அதன் செயலாளர் நாயகம் அன்தோனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார்.
ஐ.நா ஒரு நாட்டுக்கு முந்தைய இரண்டு ஆண்டுகளில் வழங்குவதற்கு நிர்ணயித்த தொகைக்கு நிகரான அல்லது அதற்கு மேல் நிலுவை வைக்கும் நாடுகளின் வாக்குரிமை நிறுத்தப்படும் என்று அந்த அமைப்பின் சாசனத்தில் விதிக்கப்பட்டுள்ளது.
இதில் நைகர், லிபியா, மத்திய ஆபிரிக்க குடியரசு, கொங்கோ பிரசவில்லே, தென் சூடான் மற்றும் சிம்பாப்வே ஆகியவையே நிலுவையை செலுத்தாத எஞ்சிய ஆறு நாடுகளாகும். இது பற்றி பொதுச் சபைத் தலைவரான துருக்கியின் வொல்கள் பொஸ்கிருக்கு அனுப்பிய கடிதத்தில் குட்டரஸ் இதனைத் தெரிவித்துள்ளார். தமது வாக்குரிமையை பெறுவதற்கு அந்த நாடுகள் செலுத்த வேண்டிய தொகை பற்றியும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி ஈரான் குறைந்தது 16.2 மில்லியன் டொலர்களை செலுத்த வேண்டி உள்ளது.
ஐ.நாவின் ஆண்டு வரவு செலுவுத் திட்டம் சுமார் 3.2 பில்லியன் டொலர்களாகும். இதில் அமைதிகாப்பு செயற்பாட்டுக்கான செலவுகள் வேறாக உள்ளது. அதனையும் சேர்த்து மொத்தம் 6.5 பில்லியன் டொலர்களாகும்.