முதலாவது கொவிட் தடுப்பூசி ஜனவரி மாதம் 27 ஆம் திகதி இந்தியாவில் இருந்து கிடைக்கப்பெறவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கிராமத்துடான சுமுகமான கலந்துரையாடல் என்ற வேலைத்திட்டத்தின் ஏழாவது கட்டம் இன்று வலலாவிட்ட மண்டாகல கிராமத்தில் இடம்பெற்ற போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஒக்ஸ்பர்ட் எஸ்ட்ரா செனக்கா என்ற தடுப்பூசியே இவ்வாறு கிடைக்கப்பெறவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
முதலாவதாக 500,000 தடுப்பூசிகள் கிடைக்கப்பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
——
இந்தியக் கடற்றொழிலாளர்களின் விவகாரம் தொடர்பான பரிந்துரைகளை வழங்குவத்றகு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் மூவர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.
உயரதிகாரிகளைக் கொண்ட சிரேஸ்ட குழு, கடற்றொழில் அமைச்சு திணைக்களங்களின் அதிகாரிகள், கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள், கடலோர காவற் படை ஆகியவற்றுடன் கலந்துரையாடி இந்தியக் கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய செயற்பாடுகளுக்கு நிரந்தரத் தீர்வை காண்பதற்கான பரந்துரைகளை கடற்றொழில் அமைச்சருக்கு வழங்கவுள்ளது.
இந்தியக் கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்ட விரோதச் செய்ற்பபாடுகளினால் இலங்கை கடற்றொழிலாளர்கள் பாதிப்புக்களை எதிர்கொள்வதுடன் இலங்கையின் கடல் வளமும் அழிவடைந்து வருகின்றது.
இதனால், குறித்த சட்ட விரோதச் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்துமாறு இலங்கை கடற்றொழிலாளர்களினால் தொடர்ச்சியான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருவதுடன் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இலங்கை கடற்பரப்பினுள் நுழைகின்ற இந்தியக் கடற்றொழிலாளர்களை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளில் இலங்கை கடற் படையினரால் மேற்கொள்ளபப்பட்டு வருகின்ற நிலையில், ஏற்பட்ட துரதிஸ்ட சம்பவத்தின் காரணமாக நான்கு இந்தியக் கடற்றொழிலாளர்கள் உயிரிழந்த சோகம் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறான சூழலில், குறித்த எல்லை தாண்டிய செயற்பாடுகளை நிரந்தரமாக நிறுத்துவதனை நோக்கமாகக் கொண்டு குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
—-
அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்கான பாராளுமன்ற சட்ட ஏற்பாடுகளுக்கு அமைவான விதிமுறைகள் இல்லாமையினால் புதிய விதிகளை தயாரிக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இந்த ஏற்பாடுகளை வர்த்தமானி மூலம் பிரசுரிக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
——
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் தமிழ் இலக்கிய விழாவில் தெரிவு செய்யப்பட்ட கலைஞர்களுக்கு பரிசு வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு கல்முனை வடக்கு பிரதேச செயலக மண்டபத்தில் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ்.நவநீதன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பதிதியாக பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் கலந்துகொண்டதுடன் கலாசார உத்தியோகத்தர்களான ரி.பிரபாகரன், சிவஜோதி உட்பட கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வருடாந்தம் தமிழ் இலக்கிய விழாவினை மிகவும் சிறப்பாக நடத்திவருகின்றது. இதில் மாகாணத்தில் கலைப்பணி ஆற்றும் பலர் வித்தகர் விருது, இளங்கலைஞர் விருது வழங்கி கொளரவிக்கப்பட்டு வருகின்றனர். அத்துடன் சிறந்த நூலுக்கான பரிசுகள், அரச உத்தியோகத்தர்களுக்கான படைப்பாக்கப்போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசுகள், சிறந்த குறுந்திரைப் படங்களுக்கான பரிசுகள் போன்றவை வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகின்றன.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இம்முறை மாகாண தமிழ் இலக்கிய விழாவினை சிறப்பாக நடத்தமுடியாத நிலையில் 2020விருதுக்கு தெரிவு செய்யப்பட்ட கலைஞர்கள் மாவட்ட மட்டத்தில் கௌரவிக்கப்பட்டுவருகின்றனர்.
அதற்கிணங்க அம்பாறை மாவட்டத்தில் வித்தகர் விருது, இளங்கலை ஞர் விருது, படைப்பாக்கப் போட்டிகள் மறறும் சிறந்த குறுந்திரைப்படங்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு கல்முனை வடக்கு பிரதேச செயலக மண்டபத்தில் கொரோனா சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.