உலக அளவில் ‘மாஸ்டர்’ படத்தின் வசூல் 200 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது. இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கரோனா அச்சுறுத்தல் முடிந்து திரையரங்குகள் திறக்கப்பட்டவுடன் வெளியான முதல் பெரிய நாயகன் படம் ‘மாஸ்டர்’. ஜனவரி 13-ம் தேதி இந்தப் படத்தைப் பெரும் தயக்கத்துடனே வெளியிட்டது. ஏனென்றால், திரையரங்குகளில் 50% இருக்கைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. படமோ பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்டு இருந்ததால், முதலீடு செய்த பணம் திரும்ப வருமா என்ற தயக்கம் இருந்தது.
ஆனால், அனைத்துத் தயக்கங்களையும் தவிடுபொடியாக்கிவிட்டது ‘மாஸ்டர்’ வசூல். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் வெளியானது ‘மாஸ்டர்’. தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் விநியோகஸ்தர்கள் முதல் வாரத்திலேயே லாபத்தை எட்டினார்கள். தமிழகத்தில் இந்த வாரத்தில் லாபத்தை ஈட்டிவிடுவார்கள் என வர்த்தக நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இந்நிலையில், உலக அளவில் மொத்த வசூலில் 200 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது ‘மாஸ்டர்’. இதனால் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளது படக்குழு. ஏனென்றால், 50% இருக்கைக்கு அனுமதித்துள்ள நிலையில் 200 கோடி ரூபாய் வசூல் எல்லாம் சாத்தியமா என்ற எண்ணத்தில்தான் வெளியிட்டார்கள். ஆனால், 10 நாட்களுக்குள் உலக அளவில் 200 கோடி ரூபாய் வசூலைத் தாண்டி ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.