ஜனவரி 26 இந்திய குடியரசு நாளானது எப்படி? – வரலாற்று தகவல்

இந்திய குடியரசு தினம் ஜனவரி 26 ஆம் தேதியான இன்று கொண்டாடப்படுகிறது. அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்க எத்தனை நாட்கள் ஆனது என்பது குறித்த வரலாற்று தகவல்கள்.

குடியரசு தினம் என்பது ஜனநாயக ரீதியில் ஒரு நாடு தங்கள் சொந்த சட்டதிட்டத்தின் கீழ் செயல்படுவதை குறிக்கும் நாளாகும். இந்தியாவில் 1950-ஆம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது.

இந்திய நாட்டிற்கான சட்டதிட்டங்கள் இயற்றப்பட்டு 1950 ஜனவரி 26 முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதுவே குடியரசு தினமாகவும் கொண்டாடப்படுகிறது. டாக்டர் அம்பேத்கர் 2 ஆண்டுகள் 11 மாதங்கள் பணியாற்றி இந்திய அரசியலமைப்பு சட்டத்தை திறம்பட இயற்றி தந்தார். 1946 டிசம்பர் 9 ஆம் தேதி இந்திய அரசியல் நிர்ணய மன்றத்தின் முதல் கூட்டம் நடந்தது. 1947 ஆகஸ்டு 29 ஆம் தேதி அம்பேத்கர் தலைமையில் அரசமைப்பு சட்ட வரைவுக் குழு உருவாக்கப்பட்டது.

வரைவு குழு உருவாக்கிய இந்திய அரசமைப்பு சட்டத்தை அரசமைப்பு நிர்ணய மன்றம் 1949ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி ஏற்றுக்கொண்டது. இந்திய அரசியலமைப்பு உலகின் மிகப்பெரிய ஜனநாயக அரசியலமைப்பு ஆகும். இந்திய சட்டத்தில் 448 ஆர்டிகிள்கள் உள்ளன. இவை ஆங்கிலம் மற்றும் இந்தியில் எழுதப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் குடியரசு தினம் மூன்று நாட்கள் கொண்டாடப்பட்டது. குடியரசு தினத்தில் ராணுவ அணிவகுப்பு 1955-ஆம் ஆண்டில் தான் முதன் முதலில் நடந்தது. டெல்லி ராஜ்பாத்தில் முதல் அணிவகுப்பு பிரமாண்டமாக நடத்தப்பட்டது. பாரத ரத்னா, பத்ம பூசண், கீர்த்தி சக்ரா போன்ற முக்கியமான பல தேசிய விருதுகள் குடியரசு தினத்தன்று வழங்கப்படுகிறது.

போர்க் காலங்களில் வீர தீர செயல்களில் ஈடுபட்டதற்காக பரம் வீர் சக்ரா, மகா வீர் சக்ரா, வீர் சக்ரா ஆகிய விருதுகளும், போர் இல்லாத காலங்களில் வீர தீர செயல்களில் ஈடுபட்டதற்காக அசோகச் சக்ரா, கீர்த்தி சக்ரா, சௌர்ய சக்ரா ஆகிய விருதுகளும் இந்திய அரசால் வழங்கப்படுகின்றன. குடியரசு தினவிழா அணிவகுப்பு டெல்லி ராஜபாதையில் குடியரசு மாளிகையில் தொடங்கி, இந்தியா கேட் வரையில் நடக்கும். கொரோனா கட்டுப்பாடு காரணமாக இந்த ஆண்டு விஜய் சவுக் முதல் நேஷன்ல் ஸ்டேடியம் வரை மட்டுமே அணிவகுப்பு என மாற்றப்பட்டது.

இந்திய குடியரசு தினநாளில் இந்திய பாதுகாப்பு படைகளின் தலைமை தளபதியாக இருக்கும் குடியரசு தலைவர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார். குடியரசு தின அணிவகுப்பு இந்திய விமானப்படையின் அணிவகுப்புடன் முடிவுக்கு வரும் விஜய் சவுக்கில் குடியரசு நாள் அணிவகுப்பில் கலந்துகொண்ட முப்படை வீரர்களும் தங்கள் முகாமுக்கு திரும்பும் பாசறை திரும்புதல் நிகழ்வு மாலையில் நடைபெறுகிறது.

குடியரசு நாள் தோன்றிய வரலாறு சொந்த சட்டத்திட்டத்தின் கீழ் ஒரு நாடு செயல்படும் நாள்.

ஜனவரி 26-ஐ வரலாற்றில் நினைவுகூர குடியரசு தின கொண்டாட்டம்.

டாக்டர் அம்பேத்கர் 2 ஆண்டு 11 மாதம் பணியாற்றி அரசியலமைப்பை இயற்றினார்.

1946 டிசம்பர் 9-இல் இந்திய அரசியல் நிர்ணய மன்ற முதல் கூட்டம்.

1947 ஆகஸ்டு 29-இல் அரசமைப்பு சட்ட வரைவுக் குழு உருவாக்கம்.

1949 நவம்பர் 26-இல் இந்திய அரசமைப்பு சட்டம் அரசமைப்பு நிர்ணய மன்றத்தால் ஏற்பு.

இந்திய அரசியலமைப்பு, உலகின் மிகப்பெரிய ஜனநாயக அரசியலமைப்பு ஆரம்பத்தில் குடியரசு தினம் 3 நாட்கள் கொண்டாடப்பட்டது.

பாரத ரத்னா, பத்ம பூசண், கீர்த்தி சக்ரா தேசிய விருதுகள் வழங்கப்படுகிறது.

பரம் வீர் சக்ரா, மகா வீர் சக்ரா, வீர் சக்ரா விருதுகளும் வழங்கப்படுகிறது.
குடியரசு மாளிகையில் தொடங்கி, இந்தியா கேட் வரை அணிவகுப்பு.அணிவகுப்பு மரியாதையை ஏற்கும் குடியரசு தலைவர் .

விமானப்படை அணிவகுப்புடன் முடிவுக்கு வரும்.

முப்படை வீரர்கள் முகாமுக்கு திரும்பும் பாசறை திரும்புதல் நிகழ்வு..

—-

சென்னை கடற்கரை சாலையில் குடியரசு தின கொண்டாட்டம்..

72வது குடியரசு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரை சாலையில் தேசியக்கொடியேற்றினார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். இதையடுத்து அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக் கொண்டார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். தேசியக் கொடியேற்றிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், பல்வேறு படைப்பிரிவுகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.

இதனைத்தொடர்ந்து பல்வேறு துறைகளில் சாதனையாளர்களுக்கு தமிழக அரசு சார்பில் விருதுகள் வழங்கப்பட்டது. தமிழகத்தில் வீரதீர செயல்களை புரிந்த 3 பேருக்கு அண்ணா பதக்கங்களை முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார். இதன்படி தமிழக அரசின் வீரதீர செயலுக்கான ‘அண்ணா பதக்கம்’ கால்நடை மருத்துவர் பிரகாசுக்கு வழங்கப்பட்டது. தமிழக அரசின் வீரதீர செயலுக்கான ‘அண்ணா பதக்கம்’ ராணிப்பேட்டையைச் சேர்ந்த ஆசிரியை முல்லைக்கு வழங்கப்பட்டது. தமிழக அரசின் வீரதீர செயலுக்கான ‘அண்ணா பதக்கம்’ மதுரையைச் சேர்ந்த ரயில் ஓட்டுநர் சுரேஷுக்கு வழங்கப்பட்டது. கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம்’ கோவையைச் சேர்ந்த அப்துல் ஜப்பாருக்கு வழங்கப்பட்டது. நெல் உற்பத்தித் திறனுக்கான நாராயணசாமி நாயுடு விருது அளிக்கப்பட்டது. முதல் முறையாக இந்த விருதானது, நாராயணசாமி நாயுடு பெயரில் வழங்கப்பட்டது.
தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்ட காவல் துறையினருக்கான ‘காந்தியடிகள் காவலர் பதக்கம்’ வழங்கப்பட்டது. பெண் ஆய்வாளர் மகுடீஸ்வரி, உதவி ஆய்வாளர் செல்வராஜ், தலைமைக் காவலர்கள் சண்முகநாதன், ராஜசேகரன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

தமிழகத்தில் சிறந்த காவல் நிலையங்களுக்கான கோப்பை வழங்கப்பட்டது. முதலிடம் – சேலம் நகர காவல்நிலையம், இரண்டாமிடம் – திருவண்ணாமலை நகர காவல்நிலையம், மூன்றாமிடம் – கோட்டூர்புரம் காவல்நிலையம்

இதனைத்தொடர்ந்து தமிழக காவல்துறையின் வியக்க வைக்கும் வீர சாகசங்கள் நிகழ்த்தி காட்டப்பட்டன. கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு காரணமாக, பள்ளி-கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டிருந்தன. ஆனால் தென்னகப் பண்பாட்டு மையத்தின் சார்பில் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. முப்படையின் வீரத்தை பறைசாற்றும் அணிவகுப்புகள், அரசுத் துறைகளின் சார்பில் அலங்கார ஊா்திகளின் அணிவகுப்புகள் போன்றவையும் விழாவில் இடம்பெற்றன.

Related posts