இந்திய அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட கொவிட் தடுப்பூசிகளின் முதல் தொகுதி, இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லேவினால் இன்று (28) கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கமைய, குறித்த தடுப்பூசிகள் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் ஒக்ஸ்பேர்ட் பல்கலைக்கழகத்த்தினால் உருவாக்கப்பட்ட அஸ்ட்ராஷெனகா கொவிஷீல்ட் (AstraZeneca COVISHELD) தடுப்பூசியை, மும்பையில் உள்ள சீரம் நிறுவனம் (Serum Institute of India) உருவாக்கியுள்ளது.
குறித்த தடுப்பூசிகளின் 500,000 dose (டோஸ்) உடன் AI 281 எனும் இந்தியன் எயார்லைன்ஸ் விமானம், இன்று முற்பகல் 11.45 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
விமானத்தின் விசேட குளிரூட்டப்பட்ட சேமிப்பகத்தில் வைக்கப்பட்ட தடுப்பூசியின் நிறை 1,323 கிலோகிராமாகும். தடுப்பூசிகள் விமான நிலையத்திலுள்ள விசேட குளிரூட்டப்பட்ட சேமிப்பு வசதிகளில் சேமித்துவைக்கப்பட்டு 25 மாவட்டங்களுக்கும், குளிரூட்டப்பட்ட வாகனங்களில் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த தடுப்பூசிகள் 2-8 பாகை செல்சியஸ் வெப்பநிலையில் சேமிக்கப்படுகின்றன.
தடுப்பூசி வழங்கலானது, மேல் மாகாணத்தின் 6 முக்கிய வைத்தியசாலைகளில் நாளை (29) ஆரம்பிக்கப்படவுள்ளது.
முதலில், கொவிட் தடுப்பு நடவடிக்கைகளில் முன்னணியில் நின்று செயற்படும், சுமார் 150,000 சுகாதாரப் பணியாளர்கள், 120,000 முப்படையினர், பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினருக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ராஜபக்ஷவின் வேண்டுகோளுக்கு பதிலளிக்கும் வகையில், சீன அரசாங்கமும் 300,000 டோஸ் தடுப்பூசிகளை வழங்கவுள்ளதாக, கொவிட் தடுப்பூசி கொள்வனவு தொடர்பான ஜனாதிபதியின் பிரதான ஆலோசகரும் ஜனாதிபதி செயலணியின் தலைவருமான லலித் வீரதுங்க தெரிவித்தார். தடுப்பூசிகளை பெறுவதானது, தனிநபர்களின் சுயாதீனமான முடிவாகும். அதை விரும்பாதவர்கள் அதை எடுக்காதிருக்க முடியும் என்றும் லலித் வீரதுங்க தெரிவித்தார்.
தடுப்பூசிகளை உத்தியோகபூர்வமாக பெற்றுக் கொள்ளும் நிகழ்வை குறிக்கும் வகையில் இந்திய உயர் ஸ்தானிகர், ஜனாதிபதிக்கு நினைவு பரிசொன்றையும் வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில், சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, கொவிட் தொடர்பான இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெனாண்டோபுள்ளே, இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண, ஜனாதிபதியின் பிரதான ஆலோசகர் லலித் வீரதுங்க, வெளியுறவு செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே, இராணுவத் தளபதி மற்றும் பாதுகாப்பு படைகளின் பதில் பிரதம அதிகாரி ஜெனரல் ஷவேந்திர சில்வா, இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் வினோத் கே ஜேகப், விமான நிலைய மற்றும் விமான சேவை நிறுவனத் தலைவர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி உள்ளிட்ட அதிகாரிகள், அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் சுகாதாரப் பிரிவின் பிரதானிகள் கலந்து கொண்டனர்.