ஓடிடி வெளியீடு தொடர்பாக பரவும் வதந்தி தொடர்பாக, ‘ஜகமே தந்திரம்’ படக்குழு அமைதி காத்து வருகிறது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ், கலையரசன், ராசுக்குட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜகமே தந்திரம்’. சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். ரிலையன்ஸ் நிறுவனம் வழங்க ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் லண்டனில் படமாக்கப்பட்டுள்ளது. மேலும், சில காட்சிகளை ராஜஸ்தான், மதுரை, ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளிலும் படமாக்கியுள்ளனர். லண்டனில் பெரும்பாலான காட்சிகளைப் படமாக்கியிருப்பதால், படத்துக்கு பெரும் பொருட்செலவு ஆகியுள்ளது.
இதனால் பல ஓடிடி நிறுவனங்கள் பேசியும், திரையரங்க வெளியீட்டுக்கு முன்னிலை கொடுத்துவந்தது. ஆனால், திடீரென்று நேற்று (ஜனவரி 30) மாலையிலிருந்து ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் நெட் ஃபிளிக்ஸ் ஓடிடி தளம் கைப்பற்றிவிட்டது எனத் தகவல்கள் பரவி வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக சில திரையரங்க உரிமையாளர்களும் கடும் அதிருப்தி தெரிவித்து வருகிறார்கள்.
ஓடிடி வெளியீடு குறித்து சர்ச்சையாகியுள்ள நிலையில், ‘ஜகமே தந்திரம்’ படக்குழுவோ அமைதி காத்து வருகிறது. விரைவில் விரிவான அறிக்கை வெளியாகும் எனத் தெரிகிறது.