இயக்குனர் சங்கருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்டை சென்னை எழும்பூர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
இயக்குனர் சங்கர் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளியாகி வசூல் சாதனை படைத்த திரைப்படம் எந்திரன். நடிகர் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடித்த இந்த திரைப்படத்தின் 2வது பாகமும் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.
இதற்கிடையில் எந்திரன் திரைப்படம் வெளியானது முதலாகவே அந்த படத்தின் கதை குறித்த சர்ச்சைகள் எழுப்பப்பட்டு வந்தன. எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் தான் எழுதிய ஜூகிபா என்ற கதையை எந்திரன் என்ற பெயரில் இயக்குனர் சங்கர் படமாக்கிவிட்டதாகவும், தனக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடனின் வழக்கை ரத்து செய்யக்கோரி இயக்குனர் ஷங்கர் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குகள் தள்ளுபடி செய்ததால், எழும்பூர் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையின் போது ஷங்கரும், அவரது வழக்கறிஞரும் ஆஜராகவில்லை.
இதனை தொடர்ந்து இயக்குனர் சங்கருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்டை எழும்பூர் உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இதையடுத்து புகார்தாரர் தரப்பு சாட்சி விசாரணைக்காக வழக்கு பிப்ரவரி 19 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.