உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – இறுதி விசாரணை அறிக்கை கையளிப்பு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இன்று முற்பகல் 11.00 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து குறித்த அறிக்கை ஆணைக்குழுவின் தலைவர் உயர்நீதிமன்ற நீதிபதி ஜனக் டி சில்வா உள்ளிட்ட உறுப்பினர்களினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்தவற்காக 2019 ஆண்டு செப்டம்பர் மாதம் 20 ஆம் திகதி ஐவர் அடங்கிய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

ஒன்றரை வருடக்காலமாக சுமார் 650 நபர்களிடம் சாட்சியம் பெற்று விசாரணைகளை முன்னெடுத்து வந்த ஆணைக்குழுவின் செயற்பாடுகள் கடந்த 27 ஆம் திகதி நிறைவு பெற்றன.

அதன்படி, குறித்த விசாரணைகளின் இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது.

—–

173வது சுதந்திர தின நிகழ்வில் ´தேசிய கீதம்´ தமிழிலும் இசைக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பிரச்சாரச் செயலாளர் ஐ.எம்.ஹாரிப் கோரிக்கை விடுத்துள்ளார்.

73 வது சுதந்திர தின நிகழ்வு எதிர்வரும் 04ம் திகதி கொண்டாடப்படவுள்ள நிலையில் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பிரச்சாரச் செயலாளர் ஐ.எம்.ஹாரிப் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளதாவது.

முன்னால் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் நல்லாட்சி காலத்தில் எமது நாட்டின் சுதந்திர தின நிகழ்வுகளில் தமிழிலும் ´தேசியகீதம்´ இசைக்கப்பட்டது.

ஆனால் சென்ற வருடம் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வில் தமிழில் ´தேசியகீதம்´ இசைக்கப்படாது பாரியதொரு மனக் கவலையினை இந்நாட்டு மக்களுக்கு ஏற்படுத்தி இருந்தது.

ஆனால் இவ்வருடம் பெப்ரவரி மாதம் 4ம் திகதி நடைபெறவுள்ள 73வது சுதந்திர தின நிகழ்வில் தமிழிலும் ´தேசியகீதம்´ இசைக்கப்பட வேண்டும் என்பது அனைத்து இன மக்களதும் விருப்பமாகவுள்ளது.

நடைபெறப் போகும் இந்த 73 வது சுதந்திர தின நிகழ்வினை சகல மக்களும் கவலையற்ற மனதோடு சுதந்திரமாக, சுதந்திர தின நாளினை நினைவு கூற வேண்டும் என்பதே இன ஐக்கியத்தினை விரும்புகின்ற, நேசிக்கின்ற அனைவரதும் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

இந்நாட்டு மக்கள் சகலரதும் அபிலாசைகளும் நிவர்த்தி செய்யப்பட வேண்டும் என்பதனை இத்தருணத்தில் நாங்களும் வலியுறுத்துகின்றோம்.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் 2வது பேராளர் மாநாட்டினை நடாத்துவதாக கடந்த வாரம் நடைபெற்ற கட்சியின் உயர்பீடக் கூட்டத்தில் உத்தேசத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்பனையும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் ஆதரவாளர்களுக்கும், கட்சியின் நலன் விரும்பிகளுக்கும், மக்களுக்கும் தெரியப்படுத்திக் கொள்ள விரும்புகின்றேன் என்றும் அவ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

—-

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் முழுமையாக துறைமுக அதிகார சபையின் கீழ் பராமரிக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்ததாக துறைமுக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தை பாதுகாக்கும் தொழிற்சங்க கூட்டு மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு இடையில் இன்று (01) காலை இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனுடன் தொடர்புடைய அமைச்சரவை பத்திரத்தை இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக பிரதமர் உறுதியளித்துள்ளதாக தொழிற்சங்கம் மேலும் தெரிவித்தது.

இதன்போது, ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இலங்கை சுதந்திர சேவையர் சங்கத்தின் தலைவர் பிரசன்ன கலுதரகே,

´குறித்த அமைச்சரவை பத்திரம் தொடர்பான அறிவிப்பு நாளைய தினம் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கிறோம். பிரதமர் எமக்கு வழங்கிய உறுதிமொழி நாளைய தினம் நிறைவேற்றப்படும் என நம்புகின்றோம். குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு வரும் வரையில் நாம் தொழிற்சங்க போராட்டத்தை கைவிடப்போவதில்லை. நாளைய தினம் உத்தியோகபூர்வ அறிவிப்பு வௌியான பின்னர் தொழிற்சங்க போராட்டம் கைவிடப்படும். குறித்த அமைச்சரவை தீர்மானத்தில் வேறு விடயங்கள் இருந்தால் எமது தொழிற்சங்க போராட்டத்தை கைவிடமாட்டோம்´. என தெரிவித்தார்.

Related posts