ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கனின் 189 ஆவது நினைவு தினம்

கண்டி இராஜியத்தின் இறுதி மன்னன் (நாயக்கர் வம்ச) ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கனின் 189 ஆவது நினைவு தினம் நேற்று முன்தினம் (30) மாலை 4 மணியளவில் தமிழக, வேலூர். பாலாற்றாங் கரையோரம் அமைந்துள்ள ஞாபகார்த்த முத்து மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது மன்னனின் சாம்பல் அடக்கம் செய்யப்பட்ட நினைவு ஸ்தூபிக்கு பரம்பரை வாரிசுகள் மலர் வளையம் வைத்தும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினார்கள். இந்த நிகழ்வில் பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

——-

கொழும்பில் உள்ள பழைய சந்தைகளை பல்வேறு பொது சேவை வசதிகளுடன் கூடிய சந்தை வளாகங்களாக அபிவிருத்தி செய்யுமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி, இந்தத் திட்டத்தின் தொடக்கமாக 1976 இல் நிறுவப்பட்ட கொள்ளுப்பிட்டி சந்தையை அபிவிருத்தி செய்வதற்கு நகர அபிவிருத்தி அதிகாரசபையும் கொழும்பு நகரசபையும் முடிவு செய்துள்ளன.

சுமார் 4 தசாப்தங்களுக்கு முன்னர் சுப்பர் மார்க்கெட் என்று இங்குள்ள கடைகள் அழைக்கப்பட்டன. இங்குள்ள கடைகளின் உரிமையாளர்களின் வேண்டுகோளின் பேரில், கொள்ளுப்பிட்டி சந்தையை எதிர்காலத்திற்கு ஏற்ற வகையில் கலப்பு அபிவிருத்தி செயற்றிட்டத்தின் கீழ் அரச மற்றும் தனியார் பங்களிப்புடன் அபிவிருத்தி செய்வதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இது தொடர்பான ஒப்பந்தம் அண்மையில் நகர அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் கொழும்பு நகரசபைக்கிடையில் கைச்சாத்திடப்பட்டது.

புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் சிறிநிமல் பெரேரா, நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பட்டய கட்டடக் கலைஞர் ஹர்ஷன் டி சில்வா, நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர, கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனாநாயக்க, மாநகரசபை ஆணையாளர் ரோஷினி திசாநாயக்க ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் கொள்ளுப்பிட்டி புதிய பல்லடுக்கு விற்பனை நிலையம் 40 மாடிகளைக் கொண்ட செயற்றிட்டமாக நிர்மாணிக்கப்படவுள்ளது. சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட கொள்ளுப்பிட்டி சந்தைத் தொகுதியானது தர்மபால மாவத்தை மற்றும் சென் மைக்கல் வீதிக்கு இடையில் அமைந்துள்ளது. கொள்ளுப்பிட்டி சந்தைத் தொகுதி, 90 கடைத் தொகுதிகளைக் கொண்ட இரண்டு மாடிகளைக் கொண்டது. கொழும்பு மாநகரசபை முன்னாள் மேயரான ஏ.எச்.எம்.பௌசியின் காலப் பகுதியில் இது நிர்மாணிக்கப்பட்டது. இச்சந்தைத் தொகுதி 1976 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் இலங்கையில் நடைபெற்ற அணிசேரா இயக்க உச்சி மாநாட்டிற்கு வருகை தந்த இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவரால் திறந்து வைக்கப்பட்டது.

தற்போது மிகவும் சேதமடைந்து காணப்படும் கொள்ளுப்பிட்டி சந்தையின் முதலாவது மாடியில் அமைந்துள்ள் மீன்கடைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரானது தரைத் தளத்திற்கு கசிந்து, தரைத் தளத்தின் வாகன நிறுத்துமிடத்தை அழுக்கடையச் செய்கிறது. தரைத் தளத்தில் நிறுத்தக் கூடிய வாகனங்களின் எண்ணிக்கை இப்போது குறைந்த பட்சம் 25 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது.

இந்தச் சந்தைக்கு பெரும்பாலும் வெளிநாட்டு நுகர்வோரே வருகை தருகின்றனர். அவ்வாறு வருகை தரும் வாடிக்கையாளர்களில் தூதரக அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்கள் பெரும்பாலும் உள்ளதாக கடைக்காரர்கள் கூறுகின்றனர். எதிர்காலத்தில் அதிகமான உள்ளூர் வாடிக்கையாளர்களை ஈர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

இந்தச் சந்தைக்கு தினமும் 1,500 முதல் 2,000 வாடிக்கையாளர்கள் வருகிறார்கள். விற்பனை தினமும் ரூபா 50 இலட்சத்தைத் தாண்டும் என்று கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தச் சந்தையில் சுகாதார வசதிகள் மிகக் குறைவு. தேவையான மொத்த கழிப்பறைகளின் எண்ணிக்கை 15 என்றாலும், தற்போது 08 கழிப்பறைகள் மட்டுமே உள்ளன. இதற்கிடையில், கொவிட்-19 நோய் நிலைமையைக் கட்டுப்படுத்த அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டுக் குழு அலுவலகமும் முக்கிய பங்கு வகிக்கிறது.

தற்போதுள்ள சந்தையை விட சிறந்த சந்தையை உருவாக்கும் நோக்கத்துடன் உரிமையாளர்களின் வேண்டுகோளின் பேரில் 40 மாடி கலப்பு வியாபார சந்தைத் தொகுதியை நிர்மாணிக்க முடிவு செய்யப்பட்டது. உத்தேச கொள்ளுப்பிட்டி பல்லடுக்கு சந்தைத் தொகுதியில் அனைத்து நவீன வசதிகளும் அமைக்கப்படும். இச்சந்தைத் தொகுதியில் வீட்டு வளாகங்கள், அலுவலக வளாகங்கள், வணிக வளாகங்கள், கார் தரிப்பிடங்கள், விழா அரங்குகள், உணவகங்கள் மற்றும் பிற அத்தியாவசிய சேவைகள் உள்ளடக்கப்படும்.

கொள்ளுப்பிட்டி சந்தையை பல மாடி கலப்பு சந்தைத் தொகுதியாக நிர்மாணிக்கும் முடிவை சந்தையில் இருக்கும் கடை உரிமையாளர்கள் வரவேற்றுள்ளனர். ஜனாதிபதியின் ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கை பிரகடனத்திற்கிணங்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனையின் பேரில் இக்கட்ட்டம் நிர்மாணிக்கப்படவுள்ளது. நகர அபிவிருத்தி, கடற்கரை பாதுகாப்பு, திண்மக் கழிவு அகற்றல் மற்றும் பொது சுகாதாரத்துறை இராஜாங்க அமைச்சர் கலாநிதி நாலக்க கொடஹேவா, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் சிறிநிமல் பெரேரா, நகர அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் பட்டய கட்டடக் கலைஞர் ஹர்ஷன் டி சில்வா, நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர மற்றும் செயற்றிட்ட பணிப்பாளர் லலித் விஜேரத்ன போன்றோரின் மேற்பார்வையின் கீழ் கொழும்பு மாநகரபையின் ஒத்துழைப்புடன் இந்த நிர்மாணிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

டப்ளியூ.கே.பிரசாத் மஞ்சு
(நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு
அமைச்சரின் ஊடக செயலாளர்)

Related posts