‘ஓ மை கடவுளே’ இந்தி பதிப்பை உருவாக்க பெரும் ஆவலுடன் காத்திருக்கிறேன் என அஷ்வத் மாரிமுத்து கூறினார்.
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணிபோஜன் ஆகியோர் நடித்து கடந்த வருடம் பிப்ரவரி மாதம் திரைக்கு வந்த படம் ‘ஓ மை கடவுளே’. இந்த படத்தில் விஜய்சேதுபதி கவுரவ தோற்றத்தில் நடித்து இருந்தார். ஓ மை கடவுளே படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வரவேற்பை பெற்றது. பிறமொழிகளில் ரீமேக் செய்யவும் ஆர்வம் காட்டினர்.
தற்போது தெலுங்கில் ஓ மை கடவுளே ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இதையும் அஷ்வத் மாரிமுத்துவே டைரக்டு செய்து வருகிறார். இந்தியில் ரீமேக் செய்யவும் பேச்சுவார்த்தைகள் நடந்து தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தி பதிப்பையும் அஷ்வத் மாரிமுத்துவே இயக்குகிறார். உமேஷ் சுக்லா தயாரிக்கிறார்.
அஷ்வத் மாரிமுத்து கூறும்போது, “ஓ மை கடவுளே என் மனதிற்கு நெருக்கமான படம். திரையுலகில் என் பயணத்தை உருவாக்கி தந்த படம். தற்போது இப்படத்தின் தெலுங்கு பதிப்பை இயக்கி வரும் நிலையில் இந்தி பதிப்பை உருவாக்க பெரும் ஆவலுடன் காத்திருக்கிறேன். இந்தியில் எனது புதிய பயணம் உற்சாகம் அளிப்பதாக உள்ளது’’ என்றார்.