தயாரிப்பாளர்கள் நலனுக்காக, படமொன்றில் நடித்துக் கொடுக்க சிம்பு சம்மதம் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்று தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார். அவருடைய அணியினரே பல்வேறு பதவிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி அணியை எதிர்த்துப் போட்டியிட்ட டி.ராஜேந்தர் தலைமையிலான அணி தோல்வி அடைந்தது.
இதனைத் தொடர்ந்து டி.ராஜேந்தர் தலைமையிலான அணியினர் புதிதாகத் தயாரிப்பாளர் சங்கம் ஒன்றைத் தொடங்கினார்கள். ‘தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்’ என்ற பெயரில் புதிய சங்கம் பதிவு செய்யப்பட்டு நிர்வாகிகளும் அறிவிக்கப்பட்டனர். தலைவராக டி.ஆர், செயலாளராக ஜே.சதீஷ்குமார், பொருளாளராக கே.ராஜன் ஆகியோர் பணிபுரிந்து வந்தனர். ஆனால், சில நாட்களிலேயே தலைவர் பதவியிலிருந்து டி.ஆர் விலகிக் கொள்ளவே, உஷா ராஜேந்தர் தலைவராக இருந்து வருகிறார்.
இந்த தயாரிப்பாளர் சங்கத்துக்கு நிதி திரட்டும் பொருட்டு சிம்பு படமொன்றில் நடித்துக் கொடுக்க முடிவெடுத்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு நிதி திரட்டும் பொருட்டு கலை நிகழ்ச்சிகள் நடத்தலாமா என நிர்வாகிகள் ஆலோசனை நடத்திய நேரத்தில், தாமாக முன்வந்து ஒரு படத்தில் நடித்துக் கொடுப்பதாக அறிவித்த நமது சங்க உறுப்பினர் சிலம்பரசன் டி.ஆர் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தப் படத்தின் மூலம் கிடைக்கும் நிதியைக் கொண்டு நலிவடைந்த தயாரிப்பாளர்களுக்கு மருத்துவ உதவி, வாரிசுகளுக்குக் கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை, ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
சங்க வளர்ச்சிக்காகவும், தயாரிப்பாளர்களின் நலனுக்காகவும் உருவாக்கப்படும் இந்தப் படத்தை சங்கத்தின் துணைத்தலைவர் சிங்காரவேலன் மிகுந்த பொருட்செலவில் தயாரிப்பார் என்பதையும், வானம் படத்தின் மூலம் வசனகர்த்தாவாக அறிமுகமாகிப் புகழ்பெற்ற ஞானகிரி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குவார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இதற்கான படப்பிடிப்பு விரைவில் துவங்கப்பட்டு இந்த ஆண்டே படம் திரைக்கு வரும் என்பதையும் பகிர்ந்து கொள்ளக் கடமைப்பட்டுள்ளோம்”
இவ்வாறு தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.