‘விண்ணைத்தாண்டி வருவாயா’ எடுத்த கெளதம் மேனன்தான் சிறந்தவன் என்று இயக்குநர் கெளதம் மேனன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் கெளதம் மேனன். தற்போது வருண் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜோஷ்வா’ படத்தை இயக்கி வருகிறார். இதனைத் தொடர்ந்து மீண்டும் சிம்பு நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார். இந்த இரண்டு படங்களையுமே வேல்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
2001-ம் ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி கெளதம் மேனன் இயக்கத்தில் ‘மின்னலே’ படம் வெளியானது. ஆகையால், இந்த ஆண்டுடன் திரையுலகில் 20 ஆண்டுகளைக் கடந்துள்ளார் கௌதம் மேனன்.
“ஒரு இயக்குநராக உங்களது வளர்ச்சி இந்த 20 வருடங்களில் திருப்திகரமாக இருக்கிறதா” என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில்:
“வளர்ச்சி, நுட்பம், சினிமா என்கிற ஊடகத்தைப் பற்றிய புரிதல் என்று பார்க்கும்போது ‘வான்மகள்’ எடுத்த கெளதம் மேனன் கண்டிப்பாக ‘மின்னலே’ எடுத்த கெளதம் மேனனை விட மேம்பட்டவன். ஆனால் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ எடுத்த கெளதம் மேனன்தான் சிறந்தவன்.
ஏனென்றால் அந்தச் சமயத்தில் படக்குழுவுடன் எனக்கிருந்த புரிதல், அப்போது எனக்கிருந்த சிந்தனை ஓட்டம் எல்லாம் அப்படி இருந்தது. மீண்டும் அப்படி ஒரு நிலைக்கு என்னால் செல்ல முடியவில்லை. இதனால்தான் இரண்டாம் பாகம் எடுக்கலாம் என்று நினைத்தேன். மீண்டும் அந்த மாயம் என்னிடம் திரும்ப வர வேண்டும் என்று விரும்புகிறேன்”.இவ்வாறு கெளதம் மேனன் தெரிவித்துள்ளார்