முஸ்லிம்களின் சடலம் எரிக்கப்படுவதற்கு இனவாதமே பிரதான காரணம்

சுகாதாரத்திற்கு அவசியமானதென்ற எந்த நம்பிக்கையுடனும் உடல்களை கட்டாயமாக தகனம் செய்யும் கொள்கை பின்பற்றப்படவில்லை, மாறாக முற்றிலும் இனவாத அடிப்படையிலேயே இது முன்னெடுக்கப்படுகின்றது.

அரசாங்கத்தின் இந்த கொள்கை முஸ்லிம் சமூகத்தினரை பெருமளவிற்கு உலுக்கியுள்ளதென தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியின்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களை பூமிக்கு ஒப்படைக்க வேண்டுமென்பது அவர்களின் அடிப்படை நம்பிக்கை என்பதால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தவர்களுக்கு இது மோசமான விடயமாகவுள்ளதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நிலத்தடி நீர் மூலம் வைரஸ் பரவும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. முஸ்லிம் சமூகம் கொங்கிரீட் கல்லறைகள் போன்றவற்றில் உடல்களை வைப்பதற்கும் முன்வந்தது. ஆனால் அரசாங்கம் ஏற்கனவே ஒரு குறிப்பிட்ட நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டுள்ளதால் அதனை உறுதியாக நிராகரித்துவிட்டது.

அரசாங்கம் அந்த நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்க விரும்பவில்லையென சுமந்திரன் தெரிவித்துள்ளார். உடல்களை அடக்கம் செய்வதற்கு மறுக்கும் நாடு நான் அறிந்த வகையில் இலங்கையே என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

——-

நெவில் பெனாண்டோ மருத்துவமனையின் நிறுவுனரான, வைத்தியர் நெவில் பெனாண்டோ காலமானார்.

கொவிட்-19 தொற்றுக்குள்ளான நிலையில் IDH வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று (04) மாலை காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவர் கொவிட்-19 தொற்று அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, இரு நாட்களுக்கு முன்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, IDH இன் அதி தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

——

ஏழு தமிழர்கள் விடுதலை விவகாரத்தில் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் முடிவு எடுக்காத நிலையில் எதிர்வரும் 9-ந் திகதி இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பது தமிழக அரசு நிலைப்பாடு ஆகும்.

இது தொடர்பான அமைச்சரவைத் தீர்மானத்தை 3 ஆண்டுகளாக கிடப்பில் வைத்திருக்கிறார் தமிழக ஆளுநர் பன்வாரிலால். இதற்கு எதிராக பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டன. ஆனாலும் ஆளுநர் தரப்பில் பல்வேறு விளக்கங்கள்தான் தரப்பட்டன. உச்சநீதிமன்றமும் இந்த விவகாரத்தில் தலையிட்டது.

12 நாட்களில் ஆளுநர் முடிவெடுத்தாக வேண்டும் என உச்சநீதிமன்றம் கெடுபிடி காட்டியது. ஆனாலும் தமிழக ஆளுநர் தரப்பில் இருந்து எந்த முடிவும் எடுக்கப்பட்டதாக இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. சட்டசபையில் நேற்று பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், ஆளுநர் விரைவில் நல்ல முடிவை எடுப்பார் என்று மட்டும் கூறியிருந்தார்.

இந்நிலையில் 7 தமிழர்கள் விடுதலை தொடர்பாக பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் எதிர்வரும் 9-ம் திகதியன்று நடைபெற உள்ளது.

அன்றைய தினம் உச்சநீதிமன்றம் 7 தமிழர் விடுதலையில் முக்கிய உத்தரவுகளை பிறப்பிக்குமா என்பது தமிழகத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related posts