ராம்கோபால் வர்மாவின் சர்ச்சை படத்தை ரிலீஸ் செய்ய அனுமதி சான்றிதழ் அளிக்க மறுத்து விட்டனர்.
பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா சர்ச்சை படங்களை எடுத்து பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். தெலுங்கானாவில் 2019-ல் இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக்கொன்ற சம்பவம் நாட்டையே உலுக்கியது. பின்னர் கொலையாளிகள் என்கவுண்டரில் கொல்லப்பட்டனர்.
இந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து திஷா என்கவுண்டர் என்ற படத்தை ராம்கோபால் வர்மா இயக்கி உள்ளார். திஷாவாக சோனியா அகுலா நடித்துள்ளார். இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்று திஷாவின் தந்தை ஏற்கனவே கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். பெண்கள் சங்கத்தினரும் போராட்டங்கள் நடத்தினர். இந்த நிலையில் திஷா என்கவுண்ட்டர் படத்தை தணிக்கை குழுவுக்கு ராம்கோபால் வர்மா அனுப்பினார். படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் நிறைய சர்ச்சை காட்சிகள் உள்ளதாகவும், பாலியல் பலாத்கார கொடுமையை அப்படியே காட்சிப்படுத்தி இருப்பதாகவும் எதிர்ப்பு தெரிவித்து படத்தை ரிலீஸ் செய்ய அனுமதி சான்றிதழ் அளிக்க மறுத்து விட்டனர். இதையடுத்து மேல் முறையீட்டு குழுவுக்கு படத்தை அனுப்பி உள்ளனர்.