தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்குவதற்கு சம்பள நிர்ணய சபை தீர்மானித்துள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் அதற்கான முக்கிய பேச்சுவார்த்தை ஒன்று நடைபெற்றதுடன் அதனையடுத்து கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்
தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக 900 ரூபாவும் வாழ்க்கை செலவு தொகையாக 100 ரூபாவையும் வழங்குவதற்கு சம்பள நிர்ணய சபை முடிவு செய்துள்ள நிலையில் அதற்கு முதலாளிமார் சம்மேளனம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அதனையடுத்து வாக்கெடுப்பு ஒன்று இடம் பெற்றுள்ள நிலையில் ஆயிரம் ரூபா என்ற தொகைக்கு ஆதரவாக பதினொரு வாக்குகளும் எதிராக 8 வாக்குகளும் கிடைத்துள்ளன.
தொழிற்சங்கங்கள் மற்றும் தொழில் ஆணையாளரினால் முன்வைக்கப்பட்ட 1000 ரூபா சம்பள அதிகரிப்பு தொடர்பில் முதலாளிமார் சம்மேளனம் இணக்கப்பாட்டுக்கு வராததால் நேற்றைய பேச்சு வார்த்தையில் இறுதி முடிவு எட்டப்படவில்லை.
அடிப்படை சம்பளமாக 900 ரூபா மற்றும் வாழ்க்கைச் செலவு தொகையாக 100 ரூபா என்ற முடிவுக்கு தொழிற்சங்கங்களும் தொழில் ஆணையாளரும் இணங்கியுள்ள நிலையில் சம்பள நிர்ணய சபைக்கூடாக அதனை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனினும் முதலாளிமார் சம்மேளனமானது 1,000 ரூபாய்க்கு இணங்கவில்லை என்பதுடன் 525 ரூபாயை அடிப்படைச் சம்பளமாகவும் வரவுக்கொடுப்பனவாக 140 ரூபாயும் மேலதிக்கொடுப்பனவாக 50 ரூபாயை வழங்குவதிலேயே விடாப்பிடியாக இருந்துள்ளது.
தமது 525 ரூபாய் முன்மொழிவையும் வாக்கெடுக்குப்பு விடுமாறு நிர்ணயச் சபையை கோரியுள்ளது. இந்த வாக்கெடுப்பில் தொழிற்சங்க உறுப்பினர்கள் கலந்துகொள்ளாத நிலையில், வாக்கெடுப்பு தோல்வியில் முடிந்துள்ளது.
இந்நிலையில் சம்பள நிர்ணயச் சபையின் இந்தத் தீர்மானம் தொழில் அமைச்சரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கக்கப்படவுள்ள நிலையில் வர்த்தமானியிலும் வெளியிடப்படவுள்ளது.
மிக நீண்டகாலமாக இழுபறியில் இருந்த தோட்டத் தொழிலாளர்களின் 1,000 ரூபாய் சம்பள உயர்வுக்கு, சம்பள நிர்ணயச் சபையினூடாக சுமூகமானத் தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாக, தொழிற்சங்க உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் தொழிலாளர்களுக்கு ஆதரவாக வாக்களித்துள்ள அரசாங்கத் தரப்பின் மூன்று உறுப்பினர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாக, இராஜாங்க அமைச்சரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். அத்துடன் இப்பிரச்சினைக்கு சுமுகத் தீர்வைப் பெற்றுக்கொடுத்ததற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அவர் நேரில் சென்று நன்றியைத் தெரிவித்துள்ளார்.
நேற்றைய மேற்படி பேச்சுவார்த்தைக்கிணங்க இரு தரப்பினரும் தமது ஆலோசனைகளை முன் வைப்பதற்காக 14 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
மேற்படி பேச்சுவார்த்தை தொடர்பில் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களில் ஒன்றான தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் கருத்து தெரிவிக்கையில்;
சம்பள நிர்ணய சபையின் ஊடாக இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் போது தொழிலாளர்களுக்கான சலுகைகள் அனைத்தும் இல்லாதொழிந்து விடும். மேற்படி ஆயிரத்து 40 ரூபா என்ற முடிவுக்கு இணக்கம் காணப்பட்டாலும் 13 நாட்களுக்கே வேலை தருவதாக முதலாளிமார் சம்மேளனம் தெரிவிக்கின்றது. அவ்வாறானால் மாதத்தில் மீதமுள்ள நாட்களில் தொழிலாளர்கள் வேலை இழக்க நேரிடும். அதற்கிணங்க 14 நாட்களின் பின்னர் இருதரப்பு ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டு அது தொடர்பில் ஆராயப்பட்டே இறுதித் தீர்வு எட்டப்படும் என்றும் அவர் தெரிவித்தார். எவ்வாறாயினும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பாக இன்று பாராளுமன்றத்தில் பிரேரணையொன்றை கொண்டுவரப்போவதாகவும் வடிவேல் சுரேஷ் எம்.பி.. மேலும் தெரிவித்தார்.(ஸ)
லோரன்ஸ் செல்வநாயகம்