‘மாஸ்டர்’ படத்தின் வெளியீட்டின்போது எடுக்கப்பட்ட ரிஸ்க் குறித்து தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ பேசினார்.
ஜனவரி 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘மாஸ்டர்’. சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் உருவான இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, கெளரி கிஷன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மாபெரும் வசூல் சாதனையை இப்படம் நிகழ்த்தியுள்ளது.
சுமார் 10 மாதங்கள் கழித்து இந்தப் படம் வெளியானதால், பல்வேறு வெளியீட்டுச் சிக்கல்களைச் சந்தித்தது ‘மாஸ்டர்’ படக்குழு. இறுதியாக சில ஏரியாக்களில் படத்தை விநியோகஸ்தர் இல்லாமல் நேரடியாகவே வெளியிட்டார்கள். இறுதியில் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்று பல்வேறு வசூல் சாதனைகளை நிகழ்த்தியுள்ளது.
இந்நிலையில் ‘மாஸ்டர்’ படத்தின் வெளியீட்டில் எடுக்கப்பட்ட ரிஸ்க் குறித்து மனம் திறந்துள்ளார் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
“எங்கள் முதலீட்டை வட்டியோடு திரும்பப் பெற்று விடுவோம் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். படத்தின் லைன் ப்ரொடியூசர்ஸ் எங்களுடன் சேர்ந்து இணை தயாரிப்பாளராக மாறினார்கள். அவர்கள் வந்த பிறகு சில விஷயங்களில் பொறுப்புகளைப் பிரித்துக் கொண்டோம். இணை தயாரிப்பாளர் லலித் வெளிநாடுகளில் விநியோகத்தைக் கையாண்டார். அவர் நல்ல அனுபவம் பெற்றவர். பேரம் பேசுவதில் திறமையானவர்.
ஆரம்பத்தில் வெளிநாடு உள்ளிட்ட அத்தனை பகுதிகளுக்கான உரிமங்களும் விற்றுப் போயின. ஆனால் தொற்றுக் காலம், ஊரடங்கு வந்ததால் விநியோகஸ்தர்கள் அவர்கள் கொடுத்த பணத்தைத் திரும்பக் கேட்டனர். அப்போதுதான் பிரச்சினை ஆரம்பித்தது. லலித் அழுத்தத்துக்கு ஆளானார். கவலை வேண்டாம் என்று அவரிடம் சொன்னேன்.