வார இறுதி நாட்களான இன்றும் நாளையும் நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
மேலும் தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்பட்டதாக 3,095 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளி பேணாமை தொடர்பிலே இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் அனைவருக்கும் எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
தனிமைப்படுத்தல் சட்டவிதிகளில் பிரதானமாக கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளான, முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை பேணுதல் போன்ற வழிமுறைகளை பின்பற்றாமை தொடர்பில் நேற்று காலை ஆறுமணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலயத்திற்குள் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதற்கமைய கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையில் 3,095 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் எதிராக வழக்கு தொடரப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்நிலையில், வார இறுதி தினங்களான இன்றும் நாளையும் நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்புகள் இடம்பெறவுள்ளன. இதன்போது, மேல்மாகாணத்திலிருந்து வெளி பிரதேசங்களுக்கு செல்லும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமான பகுதிகளிலிருப்பவர்களுக்கும் அன்ரிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதேவேளை, மேல்மாகாணத்தில் தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்பு சட்டவிதிகளை பின்பற்றாத, அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் தொடர்பில் சுகாதார பிரிவினருடன் இணைந்து பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால், உரிய நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகப்பிரிவினர் இது தொடர்பில் கவனம் செலுத்தவேண்டும். இதன்போது தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்பட்டதாக அடையாளம் காணப்படும் நிறுவனங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.