நாட்டில் இடம்பெற்ற போரின் பின்னர் அக்காலப்பகுதியில் ஏற்பட்ட அசம்பாவிதங்கள், இழப்புக்கள் தொடர்பில் ஆராய்வதற்கும் தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கும் பல்வேறு ஆணைக்குழுக்களும் காரியாலயங்களும் உருவாக்கப்பட்டன.
காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம் என்பன உருவாக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறுவதுடன் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் வரையில் அந்த அலுவலகங்கள் இயங்க வேண்டியது மிகவும் அவசியமாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
போரினாலும் அதற்கு முன்னரான காலப்பகுதியில் நாட்டில் இடம்பெற்ற இனமோதல்களாலும் பலர் சொத்துக்களை மாத்திரமன்றி தமது உறவினர்களையும் இழந்தனர். பலர் காணாமலாக்கப்பட்டார்கள். இவ்வாறானதொரு பின்னணியில் எதிர்வரும் காலத்தில் அனைத்து இனத்தவரும் ஒன்றிணைந்து எவ்வாறு முன்நோக்கிப் பயணிப்பது என்பது பற்றிச் சிந்திக்க வேண்டும்.
இது விடயத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவும் சர்வதேச நாடுகளும் எமது நாட்டின் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றன. எனவே தற்போது அரசாங்கம் ஒரு தரப்பினரைப் பற்றி மாத்திரம் சிந்திப்பதை நிறுத்திக்கொண்டு, அனைத்துத் தரப்பினரதும் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புக்கள் தொடர்பில் சிந்திக்க வேண்டும்.
காணாமல்போனோர் விவகாரம், காணாமல்போனோரின் உறவினர்களுக்கான இழப்பீட்டைப் பெற்றுக்கொடுத்தல் ஆகியவற்றுக்கு இன்னமும் முழுமையாகத் தீர்வுபெற்றுக்கொடுக்கப்படவில்லை. எனவே, காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம் போன்றவை ஸ்தாபிக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறுவதுடன் பாதிக்கப்பட்டோருக்கான தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் வரையில் அவை தொடர்ந்தும் இயங்கவேண்டியது மிகவும் அவசியமாகும் என்று குறிப்பிட்டார்.
எஸ். நிசாந்தன்