“தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பதில் சர்வதேசம் அதிக கவனம் செலுத்தவேண்டும். அதில் சுவிஸ்சர்லாந்துக்கும் பொறுப்பு உண்டு”
இவ்வாறு சுவிஸ்சர்லாந்து தூதுவரிடம் இந்து மதத் தலைவர்கள் வலியுறுத்தினர்.
யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த இலங்கைக்கான சுவிற்சர்லாந்து தூதுவர் டொமினிக் ஃபேர்கலர், நல்லை ஆதினத்துக்கு நேற்று மாலை சென்றிருந்தார்.
நல்லை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், இந்துக் குருமார் ஒன்றியத்தைச் சேர்ந்த பிரம்ம ஸ்ரீ கு.ஜெகதீஸ்வரக் குருக்கள், அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உவ தலைவர், கலாநிதி ஆறு.திருமுருகன் மற்றும் சிவதொண்டன் சுவாமிகள் ஆகியோர் சுவிஸ்சர்லாந்து தூதுவரைச் சந்தித்தனர்.
வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் தற்போதைய பிரச்சினைகள் தொடர்பில் சுவிஸ்சர்லாந்து தூதுவர் இந்து மதத் தலைவர்களைக் கேட்டறிந்தார்.
“55 ஆயிரத்துக்கு மேற்பட்ட எமது உறவுகளுக்கு அடைக்கலம் கொடுத்து அவர்களுக்கான உரிமைகளை வழங்கியுள்ள சுவிஸ்சர்லாந்துக்கு நன்றிகள் தெரிவிக்கின்றோம். அவர்கள் தமது மத வழிபாடுகளுக்கு ஆலயங்களை அமைக்க அனுமதித்துள்ளமையும் பாராட்டுக்குரியது.
அதேபோன்று இந்த நாட்டில் வாழும் தமிழ் மக்களுக்கும் சகல உரிமைகளையும் கிடைக்க சுவிஸ்சர்லாந்து ஒத்துழைக்க வேண்டும்” என்றும் இந்து மதத் தலைவர்கள் வலியுறுத்தினர்.