‘த்ரிஷ்யம் 2’ படத்துக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தெலுங்கு ரீமேக் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
மலையாளத்தில் மோகன்லால் – ஜீத்து ஜோசப் கூட்டணியில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘த்ரிஷ்யம்’. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் இந்தப் படம் ரீமேக் செய்யப்பட்டது. தற்போது மோகன்லால் – ஜீத்து ஜோசப் கூட்டணியில் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள படம் ‘த்ரிஷ்யம் 2’.
முதல் பாகத்தின் முடிவிலிருந்து, 2-ம் பாகத்தைத் தொடங்கியிருந்தார் இயக்குநர் ஜீத்து ஜோசப். ‘த்ரிஷ்யம் 2’ படம் விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சமூக வலைதளத்தில் பலரும் படத்தின் கதை, திரைக்கதை குறித்துச் சிலிர்ப்புடன் பகிர்ந்து வருகிறார்கள்.
இந்த வரவேற்பால் ‘த்ரிஷ்யம் 2’ படத்தின் ரீமேக் பணிகள் மும்முரமாகத் தொடங்கப்பட்டுள்ளன. முதலாவதாகத் தெலுங்கு ரீமேக் தொடங்கப்பட்டுள்ளது. வெங்கடேஷ் நடிக்கவுள்ள இந்தப் படத்தை ராஜ்குமார் மற்றும் சுரேஷ் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கவுள்ளன. ஜீத்து ஜோசப் இயக்கவுள்ளார்.
தெலுங்கு ரீமேக்கைத் தொடர்ந்து தமிழ் மற்றும் இந்தி ரீமேக் பணிகள் தொடங்கும் எனத் தெரிகிறது. தற்போது ‘இந்தியன் 2’ மற்றும் ‘விக்ரம்’ ஆகிய படங்களில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்தவுடன் கவனம் செலுத்தவுள்ளார் கமல். அதனைத் தொடர்ந்து ‘த்ரிஷ்யம் 2’ படத்தில் நடிப்பார் எனத் தெரிகிறது. விரைவில் ‘த்ரிஷ்யம் 2’ தமிழ் ரீமேக் தொடர்பாக கமலிடம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.