மோகன்லால், மீனா நடிப்பில் 2013ஆம் ஆண்டு வெளியான படம் ‘த்ரிஷ்யம்’. இப்படத்தை ஜீத்து ஜோசப் இயக்கியிருந்தார். விறுவிறு திரைக்கதையும், எதிர்பாரா திருப்பங்களும் நிறைந்த இப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. பல்வேறு இந்திய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது. தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் ‘பாபநாசம்’ என்ற பெயரில் வெளியானது.
பிப்.19ஆம் தேதி இப்படத்தின் இரண்டாம் பாகமான ‘த்ரிஷ்யம் 2’ நேரடியாக ஓடிடியில் வெளியானது. முதல் பாகத்தைப் போலவே இப்படமும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. சமூக வலைதளங்களில் பலரும் படக்குழுவினருக்குப் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் ‘த்ரிஷ்யம்’ படத்தை ஹாலிவுட் நடிகையான ஹிலாரி ஸ்வாங்க் பார்த்துள்ளார். கதை பிடித்துப் போனதால் மோகன்லால் நடித்த ஜார்ஜ்குட்டி கதாபாத்திரத்தைப் பெண் கதாபாத்திரமாக மாற்றினால் தான் இக்கதையில் நடிப்பதாக ஹிலார் ஸ்வாங்க் கூறியுள்ளார். இதை ஜீத்து ஜோசப் ஒரு வானொலிப் பேட்டியில் உறுதி செய்துள்ளார்.
அந்தப் பேட்டியில் ஜீத்து ஜோசப் கூறும்போது, ”ஹாலிவுட்டிலிருந்து ஒரு நபர் என்னைத் தொடர்புகொண்டு பேசினார். ‘த்ரிஷ்யம்’ படத்தில் நடிகை ஹிலாரி ஸ்வாங்க் நடிக்க விரும்புவதாகவும், ஆனால், படத்தின் முதன்மைக் கதாபாத்திரத்தை ஒரு பெண்ணாக மாற்றினால் அவர் நடிப்பார் என்றும் கூறினார். நான் அதற்கு ஏற்றவாறு கதை ஒன்றைத் தயார் செய்து அனுப்பியுள்ளேன்” என்றார்.
தற்போது இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் ‘த்ரிஷ்யம் 2’ ரீமேக் உறுதியாகிவிட்டது. தமிழில் ‘பாபநாசம் 2’ குறித்த பேச்சுவார்த்தைகளும் தொடங்கியுள்ளன.