ஒரே நேரத்தில் பல கதைகளில் பணிபுரிவது குறித்து இயக்குநர் கெளதம் மேனன் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்த் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வரும் கெளதம் மேனன், சில தினங்களுக்கு முன்பு தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். அப்போது திரையுலகினர் பலரும் அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். அன்றைய தினம் தான் இயக்கவுள்ள சிம்பு படத்தின் தலைப்பை ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார்.
ஒரே சமயத்தில் 2,3 படங்களில் பணிபுரிவது கெளதம் மேனன் பாணி. இப்போது கூட ‘ஜோஷ்வா’ படத்தில் பணிபுரிந்துகொண்டே அடுத்து இயக்கவுள்ள சிம்பு படத்தின் பணிகளையும் கவனித்து வருகிறார். இது அவருக்குப் புதிதும் அல்ல. இதற்கு முன்னதாக சில படங்களை இப்படி இயக்கியும் உள்ளார்.
“ஒரே நேரத்தில் பல கதைகளில் பணியாற்றுவது” குறித்த கேள்வியை கெளதம் மேனனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
“நான் அதைச் செய்தாலும் யாரும் அதைச் செய்ய வேண்டாம் என்றே சொல்வேன். என் மனதில் என்ன ஓடுகிறது, எந்த மாதிரியான நிலையில் நான் இருக்கிறேன் என்பதை வைத்து நான் எழுதுவேன்.
ஒரு சந்திப்புக்காக நான் லண்டனுக்குச் சென்றிருந்தேன். அப்போது நேரம் கிடைத்தது. ஒரு காஃபி ஷாப்புக்குச் சென்றேன். சிறிது நேரத்தில் என்னிடம் 80 பக்கங்களுக்கு கமலும் காதம்பரியும் கதை இருந்தது.
பின் அந்தச் சந்திப்பு சிறப்பாக முடியவில்லை. அதனால் கமலும் காதம்பரியும் கதையை ஓரம் வைத்துவிட்டு, தீவிரமான ஒரு கதையை எழுத ஆரம்பித்தேன். என்னால் வெவ்வேறு கதைகள், உணர்வுகளுக்குள் மாறி மாறிச் சென்று அதை எளிதாக எழுத முடிகிறது”
இவ்வாறு கெளதம் மேனன் தெரிவித்துள்ளார்.