காங்கிரஸ் தனித்துபோட்டி அல்லது 3-வது அணி

திமுக கூட்டணியில் கவுரவமான எண்ணிக்கையில் தொகுதி கிடைக்காவிட்டால், தனித்துபோட்டியிட வேண்டும் அல்லது 3-வது அணியில் சேர்ந்து போட்டியிடலாம் என நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கூறி உள்ளனர்.

திமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் காங்கிரஸ் கட்சி, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 30 தொகுதிகளைக் கேட்பதாகவும், ஆனால் 24 தொகுதிகளை மட்டுமே அளிக்க திமுக தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

காங்கிரஸ் கட்சி கடந்த 2006-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 4 சட்டமன்ற தேர்தல்களில் தி.மு.க.வுடன் கூட்டணியில் இருக்கிறது. அந்தவகையில், ஏற்கனவே நடைபெற்று முடிந்த 2006-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 48 தொகுதிகளும் (34 தொகுதிகளில் வெற்றி), 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 63 இடங்களும் (5 தொகுதிகளில் வெற்றி), 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 41 தொகுதிகளும் (8 தொகுதிகளில் வெற்றி) ஒதுக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக – காங்கிரஸ் இடையே ஏற்கனவே இரண்டு முறை பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திமுக – காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நிலவி வருகிறது.

இந்த நிலையில், சென்னையில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குண்டுராவ் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் பங்கேற்றார்கள்.

பின்னர் திமுக ஒதுக்கும் குறைவான தொகுதிகளை ஏற்றுக் கொண்டு கூட்டணியில் நீடிக்கலாமா? அல்லது வேண்டாமா? என்பது குறித்து மாவட்ட நிர்வாகிகளுடன் காங்கிரஸ் கட்சித் தலைமை ஆலோசனை நடத்தியது.

தொகுதி பங்கீடு-கருத்து கேட்பு கூட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் பேசும் போது கவுரவமான எண்ணிக்கையில் தொகுதி கிடைக்காவிட்டால், தனித்துபோட்டியிட வேண்டும் அல்லது 3-வது அணியில் சேர்ந்து போட்டியிடலாம் என கூறினர்.

Related posts