எம்.ஜி.ஆரின் பழைய படங்களை டிஜிட்டல் தொழில் நுட்பத்துக்கு மாற்றி திரையிட்டு வருகிறார்கள்.
எம்.ஜி.ஆரின் பழைய படங்களை டிஜிட்டல் தொழில் நுட்பத்துக்கு மாற்றி திரையிட்டு வருகிறார்கள். ஏற்கனவே ஆயிரத்தில் ஒருவன், நாடோடி மன்னன், ரிக்ஷாக்காரன், நினைத்ததை முடிப்பவன், எங்க வீட்டு பிள்ளை, அடிமைப்பெண் உள்ளிட்ட படங்கள் டிஜிட்டலில் வந்தன. இதுபோல் உலகம் சுற்றும் வாலிபன் படத்தையும் டிஜிட்டலுக்கு மாற்றி இருந்தனர். தற்போது நவீன டால்பி அட்மாஸ் ஒலியுடன் டிஜிட்டலில் மெருகேற்றி ரிஷி மூவிஸ் சார்பில் சாய் நாகராஜ் மீண்டும் வெளியிடுகிறார். உலகம் சுற்றும் வாலிபன் 1973-ல் திரைக்கு வந்தது. எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கையில் இந்த படம் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது. தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டு அ.தி.மு.கவை தொடங்கிய பின் வந்ததால் கட்சி கொடியும் இடம்பெற்றது. முருகன், ராஜு என்ற இரு வேடங்களில் எம்.ஜி.ஆர். நடித்து இயக்கி இருந்தார். லதா, மஞ்சுளா, சந்திரகலா என்று மூன்று கதாநாயகிகள். அசோகன், நம்பியார், நாகேஷ் ஆகியோரும் நடித்தனர். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் படத்தில் இடம்பெற்ற சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே, அவள் ஒரு நவரச நாடகம், தங்க தோணியிலே, பச்சைக்கிளி முத்துச்சரம், நிலவு ஒரு பெண்ணாகி உள்ளிட்ட பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தன.