ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள யுத்தக் குற்றச்சாட்டுகளிலிருந்து படையினரை பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுக்கிறதென இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். படைவீரர் ஒருவரின் திருமண நிகழ்வில் கலந்துகொண்டவேளை ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
எங்கள் கடமைகளில் ஈடுபட்டுள்ள படைவீரர்கள் என்ற அடிப்படையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தற்போதைய அமர்வில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் எடுத்துள்ள முயற்சிகள் குறித்து நாங்கள் மகிழ்ச்சியடையலாமென அவர் தெரிவித்துள்ளார்.
—-
அரசியல் பழிவாங்கல்கள் மற்றும் ஊழல் மோசடிகள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. சபை முதல்வரும் வெளிவிவகார அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன இந்த அறிக்கைகள் இரண்டையும் நேற்று செவ்வாய்கிழமை சபையில் சமர்ப்பித்தார்.
2015 ஆம் ஆண்டு ஜனவரி 08ஆம் திகதிக்கும் 2019 நவம்பர் 16ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் திட்டமிட்டு அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் தொடர்பிலான விசாரணைகள் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.அத்துடன், 2015ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் திகதிக்கும் 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டிருந்த ஊழல், மோசடிகள் தொடர்பில் ஊழல், மோசடிகள் தொடர்பிலான விசாரணைகள் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
——
வாள்கள், கூரிய ஆயுதங்களை இறக்குமதி செய்தமை தொடர்பில் விசாரணை நடாத்துமாறு, சட்ட மாஅதிபர் உத்தரவிட்டுள்ளார்.
கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தாக்கல் செய்த எழுத்து மூல முறையீட்டு மனுவுக்கமைய, பொலிஸ் மாஅதிபருக்கு இப்பணிப்புரையை விடுத்துள்ளதாக, சட்ட மாஅதிபரின் இணைப்பதிகாரி நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற காலப் பகுதியில் நாட்டிற்குள் 6,000 வாள்கள் இறக்குமதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய, உரிய முறையில் விசாரணைகளை முன்னெடுத்து சந்தேகநபர்களுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு சட்ட மாஅதிபர் அறிவுறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற காலப்பகுதியில் நாட்டுக்குள் 6,000 வாள்கள் கொண்டு வரப்பட்ட சம்பவம் தொடர்பில் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தாக்கல் செய்த மனு கடந்த மார்ச் 05ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றில், மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் அர்ஜூன ஒபேசேகர, மாயாதுன்ன கொரேயா ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
இதன்போது, குறித்த மனுவை ஆராய்வது எதிர்வரும் 31ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.