மியான்மர் தலைவர் ஆங் சாங் சூச்சி தான் ஆட்சியில் இருக்கும்போது சுமார் 6,00,000 டாலர்கள் மற்றும் தங்கத்தை சட்ட விரோதமாக பெற்றதை ஒப்புக் கொண்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மியான்மர் ராணுவம் தரப்பில், “ஆங் சாங் சூச்சி ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போதும் சுமார் 6,00,000 டாலர் மற்றும் தங்கத்தை சட்ட விரோதமாக பெற்றுள்ளார். இதனை சூச்சி ஒப்புக் கொண்டார். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் பலரும் இதனை ஒப்புக் கொண்டனர் ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மியான்மரில் கடந்த நவம்பரில் நடந்த தேர்தலில் ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயகக் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி, புதிய அரசை ஏற்க ராணுவம் மறுத்தது.
இது தொடர்பாக மியான்மர் அரசுக்கும், ராணுவத்துக்கும் இடையே மோதல் நீடித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் ஆங் சான் சூச்சி தலைமையிலான கட்சியின் ஆட்சியைக் கவிழ்த்து, ராணுவம் ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றியது.
மேலும், ஆங் சான் சூச்சி, மியான்மரின் அதிபர் யு வின் மியிண்ட் மற்றும் முக்கியத் தலைவர்களையும் வீட்டுக் காவலில் ராணுவம் வைத்தது. இதனைத் தொடர்ந்து ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேபிடாவ், யாங்கூன் ஆகிய பகுதிகளில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. இதன் காரணமாக இணையச் சேவை நாட்டின் பல இடங்களில் முடக்கப்பட்டுள்ளது.
மியான்மர் ராணுவத்துக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மியான்மரில் இளம் போராட்டக்காரர்கள் தங்களது எதிர்ப்பைத் தீவிரப்படுத்தி வருகின்றனர்.
மியான்மரில் ராணுவத்துக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் இதுவரை 50க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் மியான்மரில் வடக்கு நகரான மைட்கினாவில் ராணுவத்துக்கு எதிராகப் போராட்டங்கள் வலுவாக நடைபெற்று வருகின்றன.