தமிழ் நாவலாசியரும் எழுத்தாளருமான இமையத்திற்கு இந்த ஆண்டுக்கான சாகித்திய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் 24 மொழிகளில் இலக்கியத்தில் சிறந்த பங்களிப்பு செய்துவரும் படைப்பாளிகளுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் சாகித்ய அகாடமி விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது.
இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் தமிழ் உள்பட இருபது மொழிகளைச் சேர்ந்த படைப்பாளர்களுக்கு இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில், தமிழ் மொழியில் பிரபல எழுத்தாளர் இமையத்திற்கு அவரது ‘செல்லாத பணம்’ என்ற நாவலுக்காக சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சாகித்ய அகாடமி பெறுபவர்களுக்கு பரிசுத்தொகையாக 1,00,000 ரூபாயும், ஒரு பட்டயமும் வழங்கப்படுகின்றன. விருதுபெறும் படைப்பு இந்தியாவின் அனைத்து முக்கிய மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வெளியிடப்படும்.
எழுத்தாளர் இமையத்தின் இயற்பெயர் அண்ணாமலை. கடலூர் மாவட்டத்தில் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். விருத்தாசலத்தில் ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார்.
எந்தவித பாசாங்குமில்லாத அசலான வாழ்வியல் மொழியில் எழுதப்படட கோவேறு கழுதைகள் மூலம் வாசகர்களை வசப்படுத்தத் தொடங்கிய இமையம் பின்னர் சிறுகதைகளிலும் தீவிர கவனம் செலுத்தத் தொடங்கினார்.
எனினும் நாவல்கள், சிறுகதைகள் என இரு தடங்களிலும் தொடர்ந்து பயணித்தார்.
மண்பாரம், வீடியோ மாரியம்மன், கொலைச்சேவல், சாவு சோறு, பெத்தவன், நறுமணம், நன்மாறன் கோட்டைக் கதை ஆகிய தொகுப்புகள் வெளியான காலக்கட்டங்களிலேயே அவரது ஆறுமுகம், செடல், எங் கதெ, செல்லாத பணம் ஆகிய நாவல்களும் அடுத்தடுத்து வெளியாகின.
இவரது கோவேறு கழுதைகள், ஆறுமுகம், பெத்தவன் ஆகிய நாவல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இமயம் ஏற்கெனவே கதா விருது, பாஷாபாரதி உள்ளிட்ட விருதுகள் பலவற்றை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இமையம் எழுத்துக்கள் மிகமிக எளிமையானவை. அடித்தட்டு மக்களின் வாழ்வை, அவர்களின் பிரச்சினைப்பாடுகளை நேரடியான மொழியில் பேசுபவை. விருது பெற்றுள்ள செல்லாத பணம் நாவலில் சாதாரண குடும்ப வாழ்வில் எளிய ஆசைகளுடன் நுழைந்த பெண் தன் கணவனால் தொடர்ந்து கொடுமைக்கு ஆளான நிலையை உணர்வுபூர்வமாக பேசுகிறது.