எஸ்.பி.ஜனநாதன் மறைவுக்கு தமிழ்த் திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
தமிழ்த் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் எஸ்.பி.ஜனநாதன். தற்போது விஜய் சேதுபதி நடித்து வரும் ‘லாபம்’ படத்தை இயக்கியுள்ளார். கோடை விடுமுறைக்கு வெளியிட இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
‘லாபம்’ படத்தின் இறுதிக்கட்ட எடிட்டிங் பணிகளில் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் தீவிரமாகப் பணிபுரிந்து வந்தார். மார்ச் 11-ம் தேதி வீட்டிற்குச் சாப்பிடச் சென்றவர் நீண்ட நேரமாகத் திரும்பாததால் உதவியாளர்கள் சென்று பார்த்துள்ளனர். அப்போது அவர் சுயநினைவின்றி இருந்துள்ளார். உடனடியாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
எஸ்.பி.ஜனநாதனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு இருப்பதாகத் தெரிவித்தார்கள். அதனைத் தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சை நடைபெற்று வந்தது. இன்று (மார்ச் 14) காலை எஸ்.பி.ஜனநாதனுக்கு திடீரென்று மாரடைப்பும் ஏற்பட்டது. இதனால் சிகிச்சை பலனின்றி காலை 10 மணியளவில் காலமானார்.
எஸ்.பி.ஜனநாதன் தீவிர மார்க்சிய ஆதரவாளர். இன்று மார்க்சியத்தை உருவாக்கிய காரல் மார்க்ஸின் நினைவு நாளாகும். இன்றைய தினத்தில் எஸ்.பி.ஜனநாதனும் காலமாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய மறைவு திரையுலகினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
எஸ்.பி.ஜனநாதன் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் வெளியிட்டுள்ள ட்வீட்கள் தொகுப்பு:
பாரதிராஜா: நம்பிக்கையும், பிரார்த்தனைகளும், கை நழுவிச் சென்றாலும் இயற்கை அன்னை ஒரு போதும் கைவிடாது உன்னைத் தழுவிக் கொள்ளும்.. சென்று வா.. செந்நிறத் தோழனே.
பி.சி.ஸ்ரீராம் : சமூகம் மீதான உங்கள் நம்பிக்கையைப் பிரதிபலிக்கும் உங்கள் திரைப்படங்கள் என்றென்றும் நினைவில் இருக்கும். உங்கள் ஆன்மா சாந்தி அடையட்டும்.
சத்யராஜ்: எஸ்.பி.ஜனநாதன் உயர்ந்த சிந்தனையுள்ள ஒரு அற்புதமான இயக்குநர். முற்போக்கு சிந்தனையாளர். என்னுடைய இனிய நண்பர். அவருடைய மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பு.
பா.இரஞ்சித்: எளிய மக்களின் வாழ்வை,அவர்கள் பின்னால் சுழலும் அதிகார சுரண்டலை, துணிச்சலுடன் காட்சிபடுத்தி தமிழ்த்திரையில் புது வெளிச்சம் பாய்ச்சிய “முன்னத்தி ஏர்”தோழர் திரு.SP ஜனநாதன் ஐயா அவர்களின் இறப்பு செய்தி பெரும் துயரத்தை உண்டாக்குகிறது. அவரை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள் !!
மோகன் ராஜா: இது மனதை உலுக்குவதாக இருக்கிறது… ஆன்மா சாந்தி அடையட்டும் எஸ்.பி. ஜனநாதன் சார். நீங்கள் எனக்கும் என் போன்ற பலருக்கும் ஊக்கமாக இருந்தீர்கள். எப்போதும் நினைவில் இருக்கக் கூடிய ஒரு உயர்ந்த ஆன்மா.
வெங்கட் பிரபு: அதிர்ச்சியாக இருக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்கள்.
ஜெயம் ரவி: உங்கள் ஆன்மா சாந்தி அடையட்டும் ஜனா சார். எங்கள் நினைவுகளிலிருந்து உங்களை யாராலும் பிரிக்க முடியாது.
அறிவழகன்: திரையில் சொல்லாத பக்கங்களையும் சமூகத்தின் மீதுள்ள அக்கறை மற்றும் கோபத்தினையும் ஒருங்கே திரையில் பதிவு செய்து, பழகிய அனைவருக்கும் தோழராய் இருந்த இயக்குநர் ஜனா அவர்களின் படைப்பு என்றுமே சமுகத்திற்கு ஒரு விதையாய் இருந்தது என்பது உண்மை. என்றும் வளரும் அவைகள்.
தங்கர் பச்சான்: நாம் இருவரும் சந்தித்துக் கொண்டால் மணிக்கணக்காய் பேசிக்கொண்டிருப்போம்! 28 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய நட்பை இழந்து நிற்கின்றேன்! உன் பேரிழப்பை மனம் ஏற்க மறுக்கிறது ஜனா!
கவுதமி: தேசிய விருது வென்ற சிறந்த திரைப்பட இயக்குநர் திரு எஸ்.பி.ஜனநாதன் அவர்களின் அகால மரணம் என்னை ஆழ்ந்த வருத்தத்திற்கு உள்ளாக்கியது. இன்னும் பல சிறந்த திரைப்படைப்புகளைத் தந்திருக்க வேண்டிய அவரது திரைப்பயணம் இத்துடன் முடிவடைவது தமிழ் திரையுலகத்திற்கும் திரைப்பட ரசிகர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு. அவரது பிரிவால் வாடும் அவர் குடும்பத்தினருக்கும் அவர் அன்புக்குரியோர்களுக்கும் என் ஆறுதல்களையும் ஆழ்ந்த இரங்கல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
ஸ்ருதிஹாசன்: எஸ்.பி. ஜனநாதன் சாரை கனத்த இதயத்துடன் வழியனுப்பி வைக்கிறோம். உங்களுடன் பணிபுரிந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நீங்கள் கொடுத்த ஞானத்துக்கும், கனிவான வார்த்தைகளுக்கு நன்றி. என் நினைவுகளில் எப்போதும் நீங்கள் இருப்பீர்கள். அவரது குடும்பத்துக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.
இமான்: லாபம் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் மறைந்து விட்டார். அவரது முன்மாதிரியும் சமூக புரட்சியாளருமான கார்ல் மார்க்ஸ் மறைந்த நாளிலேயே அவரும் மறைந்திருக்கிறார். உங்களை மிஸ் செய்கிறோம் சார்.
அதியன் ஆதிரை: சினிமாவின் அடிப்படைகளை மாற்றி தன் படைப்பில் செயலில் முற்போக்கு அரசியலை முன்வைத்த தோழருக்கு செவ்வணக்கம் தோழா..விருமாண்டி: அண்ணா எப்போதும் அன்பை மட்டும் கொடுத்துக்கொண்டே இருந்தே மனித தெய்வமே தெய்வமாகிவிட்டாய் அண்ணா இயக்குநர்கள் சங்கத்தில் ஆரம்பித்த அண்ணன் ,தம்பி என்ற பாசம் கடந்த 12 ஆண்டுகளாக இருந்து வந்தது படத்தைப் பார்த்துவிட்டு ஆனந்தமாகப் பேசிய வார்த்தைகளை என்னால் மறக்க முடியாது