‘தமிழ்நாட்டில், தியேட்டர்களுக்கு போய் படம் பார்ப்பவர்களின் கூட்டம் குறைந்து கொண்டே வருகிறது. இதனால் தியேட்டர்களை மூடவேண்டிய அபாயம் உருவாகி இருக்கிறது’’ என்று திரையரங்க உரிமையாளர்கள் சோகத்துடன் கூறினார்கள்.
தமிழ்நாட்டில் மொத்தம் 1,145 தியேட்டர்கள் உள்ளன. இதில், ‘மால்’களில் உள்ள தியேட்டர்களும் அடங்கும். சுமார் 20 வருடங்களுக்கு முன்பு வரை தியேட்டர்களுக்குப்போய் படம் பார்ப்பதுதான் எல்லோருடைய பொழுதுபோக்காக இருந்தது.
தொலைக்காட்சிகளில் தொடர்கள் ஒளிபரப்ப தொடங்கிய பின், தியேட்டர்களுக்கு வரும் பெண்கள் கூட்டம் குறைய ஆரம்பித்தது. பெண்கள் வீட்டிலேயே அமர்ந்து டி.வி. தொடர்களை ரசித்து பார்க்க தொடங்கினார்கள். நாளடைவில் தியேட்டருக்குப்போய் செலவு செய்து படம் பார்ப்பதைவிட, வீட்டிலேயே உட்கார்ந்து படங்களையும், தொடர்களையும் பார்ப்பதை பெண்கள் சவுகரியமாக உணர்ந்தார்கள்.
இதோடு திருட்டு வி.சி.டி. மற்றும் இணையதளங்களில் சவால் விட்டு படங்களை வெளியிடுவதால் தியேட்டர்களுக்கு வரும் கூட்டம் மேலும் குறைந்தது. இந்த நிலையில், கடந்த ஒரு வருட காலமாக கொரோனா நோய் பாதிப்பு, பொதுமக்கள் மத்தியில் உயிர் பயத்தை ஏற்படுத்தியது.
இதன் காரணமாக தியேட்டர்களுக்கு வருபவர்களின் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணக் கூடிய அளவுக்கு மிக மிக குறைந்தது.
இதுபற்றி தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் கூறியதாவது:-
‘‘கடந்த ஒரு மாத காலமாக தியேட்டர்களுக்கு வந்து படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது. சிறந்த கதையம்சம் உள்ள படங்களுக்கு கூட, கூட்டம் வருவதில்லை. ஒரு காட்சிக்கு பத்து அல்லது பதினைந்து பேர்களே வருகிறார்கள்.
ஒரு பெரிய கதாநாயகன் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த படம் நன்றாகவே இருந்தது. இருப்பினும் அந்த படத்துக்கு எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம் வரவில்லை. கடந்த வாரம் வந்த 2 நல்ல படங்களுக்கும் இதே நிலைதான். இதனால் பெரும்பாலான தியேட்டர்களில் காட்சிகள் ரத்து செய்யப்படுகின்றன.
பத்து பதினைந்து பேர்களை வைத்து படத்தை ஓட்ட முடியாது. மின்சார கட்டணத்துக்கே தேறாது. தியேட்டர் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாது. குறைந்தபட்சம் 100 பேர்களாவது வந்தால்தான் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியும்.
இப்போது உள்ள நிலை நீடித்தால், தியேட்டர்களை மூடும் அபாயம் ஏற்படும்.’’ இவ்வாறு பன்னீர்செல்வம் கூறினார்.