கடந்த நல்லாட்சி அரசாங்கம் மாகாணசபை தேர்தல் நடத்தும் சட்டத்தை மாற்றியமைத்துள்ளதால் உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாத நிலை காணப்படுவதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கு முன்பதாக அதற்கான பாராளுமன்ற அனுமதியை பெற்றுக் கொள்வது அவசியம் எனவும் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மாகாணசபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் சம்பந்தமாக இக்காலங்களில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மாகாணசபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி சார்பில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் ஊடகவியலாளர்கள் அது தொடர்பில் வினவிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே வெளிவிவகார அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான சட்டத்தை கடந்த நல்லாட்சி அரசாங்கம் மாற்றி அமைத்துள்ளது. அது சட்டவிரோதமானது என உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. அந்தவகையில் சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தாமல் எவருக்கும் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது. அதற்கிணங்க சம்பந்தப்பட்ட சட்டத்தை முறையாக தயாரித்து அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றுமாறு நீதிமன்றம் தெரிவித்துள்ளது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கருத்து தெரிவித்த பொதுநிர்வாக மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி சபை அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் மாகாண சபை தேர்தலை நடத்துவது தொடர்பில் தாம் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தி யுள்ளதாகவும் அதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.