அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்திக்கப் போவதில்லை

ஜனாதிபதியின் அறிவிப்புக்கு அமைவாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை தான் சந்திக்கவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஆனால் நாம் அவரை ஒரு போதும் சந்திக்கப் போவதில்லை. அவரை சந்திக்கும் விருப்பமும் இல்லை என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் தலைவி யோ.கனகரஞ்சினி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,…

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், தங்களின் உறவினர்கள் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் பொறுப்புக் கூற வேண்டும் என தொடர்ச்சியாக கூறி வருகின்றனர்.

தற்போதைய ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த போதே எங்கள் உறவுக்ள அதிகம் காணாமல் ஆக்கப்பட்டனர். அந்த பின்னர் மகிந்த ராஜபக்ஸ அரசின் காலத்திலும் காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகளுக்கு அரசோ அவ்வரசில் அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவானந்தாவினாலோ எந்த தீர்வும் கிடைக்கவில்லை.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு இலங்கை அரசினால் நீதி கிடைக்கும் என்ற நம்பிகை அற்றுப் போய்விட்டது.இந்த நிலையில் அந்த அரசின் பிரதிநிதியாக உள்ள அமைச்சரை சந்திப்பதில் பயனில்லை என்றும் சர்வதேசமே எமக்கான நீதியை பெற்றுத் தர வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

—-

என்னை சந்திப்பதும் விடுவதும் அவர்களது விருப்பம். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் ஒவ்வொரு அமைப்புக்களும் ஒவ்வொரு உள்நோக்கங்களுடன் செயல்படுகின்றன.எனவே அவர்கள் அதற்கேற்ற மாதிரியே செயற்படுவார்கள். நான் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று யோசிக்கின்றேன் அவர்கள் பிரச்சினையை தீராப் பிரச்சினையாக வைத்திருக்க யோசிக்கின்றார்கள். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்திப்பதற்கு கடந்த முறை நான் அழைப்பு விடுத்து நூற்றுக்கணக்கானவர்கள் வந்து சந்தித்தார்கள். பின்னர் அச்

சந்திப்புக்களை அரசியல் சூழ் நிலையால் தொடர முடியவில்லை. தற்போது நான் அதனை திருப்பி தொடர்கின்றேன் எனக் குறிப்பிட்ட அமைச்சர்,.. நான் சங்கங்களுக்கு அழைப்பு விடவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கே அழைப்பு விடுத்துள்ளேன். அவர்களை நான் வலிந்து அழைக்கவுமில்லை, எனவே அவர்கள் விரும்பினால் வந்து சந்திக்கலாம்.மேலும் எனக்கும் அந்த பாதிப்புக்கள் உண்டு. எனது தம்பி மற்றும் நெருக்கமானவர்கள் என பலர் கொல்லப்பட்டுள்ளனர், காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு யார் பொறுப்புக் கூறுவது எனத் தெரிவித்த அவர் தனது அலுவலகத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும் தெரிவித்தார்.

Related posts