நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் நேரடியாக வெளியாகவிருக்கும் ’ஜகமே தந்திரம்’ திரைப்படத்துக்கு 18+ என்கிற மதிப்பீடை அந்தத் தளம் வழங்கியுள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ், கலையரசன், ராசுக்குட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜகமே தந்திரம்’. சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். ரிலையன்ஸ் நிறுவனம் வழங்க, ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
பெரும் பொருட்செலவில் உருவான இந்தப் படம் கரோனா அச்சுறுத்தல் தொடங்கும் முன்பே தயாராகிவிட்டது. கரோனா ஊரடங்கு சமயத்திலேயே ஓடிடி வெளியீட்டுப் பேச்சுவார்த்தையில் படக்குழு ஈடுபட்டது. ஆனால், இறுதி செய்யப்படாமல் இருந்தது. ‘ஏலே’ பட வெளியீடு தொடர்பாகத் திரையரங்க உரிமையாளர்களுடன் தயாரிப்பாளர் சசிகாந்துக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, விஜய் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்புக்கு ‘ஏலே’ படத்தைக் கொடுத்துவிட்டார். பின்பு, ‘ஜகமே தந்திரம்’ படத்தையும் ஓடிடி வெளியீட்டுக்குக் கொடுத்துவிட்டார். ஃநெட்ப்ளிக்ஸ் ஓடிடி நிறுவனம் பெரும் விலை கொடுத்து ‘ஜகமே தந்திரம்’ படத்தின் உரிமையைக் கைப்பற்றியுள்ளது.
நேரடி ஓடிடி வெளியீடு குறித்து தனுஷ் தரப்பில் அதிருப்தி நிலவி வந்தாலும் மேற்கொண்டு இது குறித்து தயாரிப்பாளர் தரப்பில் யாரும் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. தற்போது நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் ’ஜகமே தந்திரம்’ படத்துக்கு 18+ என்கிற மதிப்பீடு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே 18 வயதுக்கும் மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்க உகந்த திரைப்படமாக ’ஜகமே தந்திரம்’ மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் கதைச் சுருக்கத்தையும் வெளியிட்டுள்ளது நெட்ஃபிளிக்ஸ். அதில், “தனக்கென வீடு என்கிற ஒரு இடத்தைப் பிடிக்கும் முயற்சியில் நல்லதுக்கும் கெட்டதுக்கும் இடையிலான சண்டையில் மாட்டிக் கொள்கிறான் நாடோடி கேங்ஸ்டர் ஒருவன்” என்று இந்தக் கதை சுருக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஓடிடி தளங்கள் வழக்கமாக மத்திய தணிக்கை வாரியத்தின் சான்றிதழைத் தாண்டி தாங்கள் நேரடியாக தயாரித்தோ, வாங்கியோ வெளியிடும் திரைப்படங்களுக்குக் தனியாக தணிக்கை மதிப்பீடை வழங்குகின்றன. மேலும் திரையரங்க தணிக்கை போல அல்லாமல் ஓடிடியில் வன்முறை, ஆபாசக் காட்சிகளுக்கான தளர்வுகளும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.