சிலுவை மரணமும் தேவ சமாதானமும்.
சகோதரன். பிரான்ஸ்சீஸ் அந்தோனிப்பிள்ளை.
ரெகொபோத் ஊழியங்கள் – டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம்.
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம். ரோமர் 5:1
தேவனால் தம்மை ஆராதித்து வணங்கும்படியாக படைக்கப்பட்ட மக்கள் அவருடைய கட்டளையான விலக்கப்பட்ட மரத்தின் கனியை புசிக்கக்கூடாது என்பதை மீறி புசித்ததினால் உலகம் பாவத்திற்கு உள்ளாக்கப்பட்டது. இதை நாம் ஆதியாகமம் 2:16-17 இல் காணலாம். தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி, நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். ஆனாலும் நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம். அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார். (இதன் கருத்து மனிதன் தேவ கட்டளையை மீறுவதினால் தேவனுடனான உறவு துண்டிக்கப்பட்டு, ஆவி ஆத்துமாவில் மரணத்தை அடைதல்). அன்றிலிருந்து இன்று வரையும் அதே பாவம் பல வழிகளில் உலகில் தொடர்ந்து வருவதை நாம் காணக்கூடியதாக உள்ளது.
இவ்வாறு பல வழிகளில் மக்கள் தேவ கட்டளைகளை மீறி பாவத்தின் அடிமைத் தனத்தில்மூழ்கி அழிவைக் கண்டடையாமல், அதிலிருந்து விடுதலையை அடைந்து நித்திய ஜீவனைப் பெற்றுக் கொள்ளும்படியாக பிதாவாகிய தேவன் தமது நீடிய இரக்கத்தினால் எண்ணிலடங்கா முயற்சிகள் மேற்கொண்டதும், அவையாவும் மனித முரட்டாட்டங்களால் சீர்குலைந்து போனதும் பழைய ஏற்பாட்டின் வரலாறுகளில் நாம் காணலாம். ஆனாலும் பிதாவாகிய தேவன் தமது ஒரேபேறான குமாரனாகிய இயேசுவை இவ்வுலகத்திற்கு அனுப்பி, தேவசித்தத்தின்படி இயேசு தம்மைத்தாழ்த்தி, சிலுவை பரியந்தம் கீழ்ப்படிந்து, இயேசு சிந்திய இரத்தக்கிரயமே இப்போது நம்மை தேவனுடன் ஒப்பரவாக்கி சமாதானத்துடன் வாழ வழி செய்தது. தேவனுடன் நமக்கு ஏற்பட்ட இந்த சமாதானம் தேவனின் ஈவாகும்.
இதை நாம் இன்னும் விளங்கிக்கொள்ள கீழ்வரும் வேதப்பகுதியை வாசிப்போம். ரோமர் 5:8-11. நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல்வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார். இப்படி நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்க, கோபாக்கினைக்கு நீங்கலாக அவராலே நாம் இரட்சிக்கப்படுவது (காக்கப்படுவது) அதிக நிச்சயமாமே. நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத் தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால், ஒப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே. அதுவுமல்லாமல், இப்பொழுது ஒப்புரவாகுதலை நமக்குக் கிடைக்கப்பண்ணின நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாய் நாம் தேவனைப்பற்றியும் மேன்மைபாராட்டுகிறோம்.
இப்போது உணர்ந்திருப்பீர்கள், இயேசுவின் சிலுவை மரணம் நமக்கு என்ன செய்துள்ளது என்று. இதை இன்னும் விளங்கிக்கொள்ள பின்வரும் வேதப் பகுதியையும் வாசிப்போம். எபேசியர் 2:1-4 அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை (எங்களை) உயிர்ப்பித்தார். அவைகளில் நீங்கள் (நாம்) முற்காலத்திலே இவ்வுலக வழக்கத்திற்கேற்ற படியாகவும், கீழ்;ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியைசெய்கிற ஆகாயத்து அதிகாரப் பிரபுவாகிய ஆவிக்கேற்றபடியாகவும் நடந்துகொண்டீர்கள்.
அவர்களுக்குள்ளே நாமெல்லாரும் முற்காலத்திலே நமது மாம்ச இச்சையின்படியே நடந்து, நமது மாம்சமும் மனசும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப்போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம். தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே, அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்;. (தேவ தண்டனையில் இருந்து விடுதலை பெற்றோம்) கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்.
தேவனுக்கு பிரியமான மக்களே, இப்போது அறிந்திருப்பீர்கள், இயேசுவின் சிலுவை மரணத்தினால் வரும் ஆறுதலைப்பற்றி. இந்த ஆறுதலை, விடுதலையை நீங்களும் பெற்று வாழவேண்டும் என்று தேவன் விரும்புகிறார். இந்த விடுதலையை நீங்களும் அடைந்து கொள்ள என்னுடன் சேர்ந்து இந்த ஜெபத்தை தேவனுடத்தில் ஒப்புக் கொடுப்போம்.
அன்பின் இயேசுவே, மெய்யாகவே எனக்காக வேதனைப்பட்டு சிலுவையில் உமது உயிரைக்கொடுத்த அந்த அன்பின் ஆழத்தை இன்று உணரப்பண்ணியதற்காக உமக்கு நன்றி அப்பா. எனது சுயசிந்தனைமூலம் தேவகட்டளையை மீறி தேவ கோபாக்கினைக்கு அகப்படாமல், உமது சிலுவை மரணத்தின் மூலம் விடுதலையையும், தேவனுடனான சமாதானத்தையும் கண்டுகொள்ள உதவிநீரே அதற்கு நன்றி. இந்த நன்றியை நான் ஒருநாளும் மறவாமல் வாழ உதவி செய்து என்னையும், எனது குடும்பத்தையும் காத்துக்கொள்ளும்படியாக இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்லபிதாவே, ஆமேன்.
கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.
Bro. Francis T. Anthonypillai. Rehoboth Ministries – Praying for Denmark