ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானங்களை சிறந்த முறையில் எதிர்கொள்வோம் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார். 30 வருட கால சிவில் யுத்தம் இலங்கையின் சுதந்திரத்திற்காகவே முன்னெடுக்கப்பட்டது. விடுதலை புலிகள் குறித்து மாத்திரம் கவனம் கொள்ளும் மேற்குலகம் யுத்தத்தில் உயிரிழந்த 29 ஆயிரம் படைவீரர்கள் மற்றும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தை தவிர்த்து ஏனைய மாகாணங்களில் விடுதலை புலிகளின் தாக்குதலினால் உயிரிழந்த அப்பாவி பொது மக்கள் குறித்து கவனம் கொள்ளாதது கவலைக்குரியதாகும்.
எந்த நாடுகளையும் பகைத்துக் கொள்ளாமல் ஜெனீவா விவகாரத்தை அரசாங்கம் சிறந்த முறையில் கையாளும். தீரமானங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு சில விடயங்களை நாட்டின் சுயாதீனத்தன்மைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அரசியலமைப்பிற்கு உட்படுத்தி உள்ளக பொறிமுறை ஊடாக செயற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானங்கள் மீதான வாக்கெடுப்பு இன்று திங்கட்கிழமை இடம்பெறவுள்ள நிலையில் அது தொடர்பில் வினவிய போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
—–
பிரேரணையை தோற்கடிக்க அரசு இராஜதந்திர ரீதியில் முயற்சி
ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் 46 அமர்வில் முன்வைக்கப்பட்டுள்ள இலங்கை குறித்த பிரேரணை இன்றைய தினம் – விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. பெரும்பாலும், பிரேரணை மீதான வாக்கெடுப்பும் இன்றைய தினமே இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையின் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு என்ற தலைப்பிலான குறித்த யோசனை, பிரித்தானியா, ஜேர்மனி, கனடா, வடக்கு மெஸிடோ னியா, மொன்டினீக்ரோ மற்றும் மலாவி ஆகிய நாடுகளால் முன்வைக்கப்பட்டுள்ளது.
விவாதத்தின் இடைநடுவே, சில நாடுகள் தலையீடும் செய்யும் என எதிர்பார்க்கப்படுவதால், பிரேரணை மீதான வாக்கெடுப்பு செவ்வாய்க்கிழமைவரை பிற்போடப்படலாம் என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
47 உறுப்பு நாடுகளை கொண்ட ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில், குறித்த பிரேரணை தொடர்பில், தமது நட்பு நாடுகளுடன் கலந்துரையாடி அது குறித்து விளக்கவும் ஆதரவு பெறவும் இலங்கை முயன்று வருகிறது.
குறிப்பாக வலய நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், நோபாளம் மற்றும் பங்களாதேஷ் ஆகிய வலய நாடுகளின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா தமது நிலைப்பாட்டை அறிவிக்காத போதிலும், வாக்களிப்பில் இருந்து விலகி இருக்கும் என நம்பப்படுகிறது.
ஏற்கனவே, இலங்கை தொடர்பிலான மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை சீனா, ரஷ்யா, பிலிப்பைன்ஸ் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் விமர்சித்துள்ளன.
இந்தநிலையில், மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு ஆதரவளிக்க பாகிஸ்தான் தீர்மானித்துள்ளதாக அந்த நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.
இலங்கை தொடர்பில், இதற்கு முன்னதாக முன்வைக்கப்பட்ட பிரேரணைகளின்போது, அதற்கு எதிராக பாகிஸ்தான் வாக்களித்திருந்தது.
பிரித்தானியாவின் பிரேரணைக்கு கனடா, ஜெர்மனி, மொன்டினிக்ரோ, வடக்கு மெசிடோனியா, மலாவி ஆகிய நாடுகள் இணை அனுசரணை வழங்கியுள்ள நிலையில்
பிரேரணையை தோற்கடிக்க இலங்கை அரசாங்கம் ராஜதந்திர ரீதியிலான முயற்சிகளை மேற்கொண்டு வருவதோடு அங்கத்துவ நாடுகளுடன் பேச்சுநடத்தி வருகிறது.இதே வேளை பிரேரணையை வெற்றிபெற வைப்பதற்கு அனுசரணை நாடுகள் ஆதரவு திரட்டி வருகின்றன. இதில் இந்தியாவின் ஒத்துழைப்பை பெற இருதரப்பும் முயன்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்த பிரேரணை வெற்றிபெறும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு நம்பிக்கை வௌியிட்டுள்ளது.
ஆனால் இலங்கைக்கு எதிரான மனித உரிமை பிரேரணைக்கு எதிராக அணிதிரளுமாறு வெளிவிவகார அமைச்சர் சர்வதேச நாடுகளிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இலங்கைக்கு எதிராக முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் அரசியல் நோக்கத்திற்காக முன்னெடுக்கப்பட்டுள்ளன.எமது நாட்டின் உள்ளக விடயங்கள் தொடர்பில் குற்றம் சாட்டுவது அல்லது வாக்களிப்பது சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட மனித உரிமைகள் பேரவையின் பொறுப்பான செயற்பாடல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் இதுபோன்ற பல சாதகமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகையில், எமக்கு எதிராக பல்வேறு வழிகளில் குற்றங்களை சுமத்தி, மனித உரிமைகள் பேரவையில் புறக்கணிப்பது நியாயமில்லை என்றும் அவர் கூறியுள்ளார். ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் 46 ஆவது அமர்வு கடந்த பெப்ரவரி 22 இல் ஆரம்பமானது.
மார்ச் 23 வரை நடைபெறும் இந்த அமர்வில் உலக நாடுகளின் மனித உரிமை நிலைமை தொடர்பாக ஆராயப்படுகிறது. இலங்கை குறித்த விவாதமும் நடைபெற்ற நிலையில் இலங்கை தொடர்பில் முன்வைத்துள்ள பிரேரணை மீது இன்று வாக்கெடுப்பு நடைபெறுகிறது
ஐக்கிய நாடுகள் சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் 193 நாடுகளில், ஜெனீவா மனித உரிமை ஆணைக்குழுவில் வாக்களிக்க 47 நாடுகள் மாத்திரமே தகுதிபெற்றுள்ளன.
21 நாடுகள் இலங்கைக்கு ஆதரவு வழங்க இணக்கம் தெரிவித்துள்ளதாக அறிய வருகிறது.சில நாடுகள் நடுநிலை வகிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. (பா)
சுப்பிரமணியம் நிஷாந்தன்